‘அரசியலாக்க விரும்பவில்லை..’ - ஹாத்ரஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ராகுல் பேச்சு!


ஹாத்ரஸ்: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் போலே பாபா சாமியார் நடத்திய பிரசங்க கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 உயிரிழந்தனர். இச்சூழலில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இந்தச் சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) அன்று ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் போலே பாபா சாமியாரின் பிரசங்க கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 121 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை அன்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார்.

இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் ரேபரேலி தொகுதி மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, வெள்ளிக்கிழமை ஹாத்ரஸ் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "இது ஒரு சோகமான சம்பவம். பலர் இறந்துள்ளனர். இதனை நான் அரசியல் கோணத்தில் பார்க்க விரும்பவில்லை. ஆனாலும் நிர்வாகத்தின் தரப்பில் சில குறைபாடுகள் உள்ளன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள் அவர்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்த மனதுடன் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அது யாருக்கும் பயனளிக்காது. இறந்தவர்களின் குடும்பத்தினருடன் நான் தனிப்பட்ட முறையில் நான் பேசினேன். அங்கு எந்த போலீஸ் பாதுகாப்பு இல்லை என்று கூறினர். அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நான் அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொள்ள விரும்பினேன்" என்று தெரிவித்தார்.