ஈரானில் அதிகாலையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிடங்கள் இடிந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
அண்மையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்தியா உள்பட பல நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவிகள் செய்தன. இந்த சோகம் மறைவதற்குள் ஈரானில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் தென்மேற்கில் உள்ள பந்தர்அப்பாஸ் நகரில் இருந்து 100 கி.மீ தொலைவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்தன. வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வீதிக்கு ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் அவர்களை மீட்கும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.