செலவோ 75 லட்சம்... 150 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தேசியக்கொடி: ஒரேநாளில் சேதமான வேதனை


சர்வதேச சுற்றுலாத்தளமான கன்னியாகுமரியில் 75 லட்சம் மதிப்பீட்டில் வைக்கப்பட்ட பிரமாண்டமான தேசியக்கொடி, ஒரே நாளில் சேதமானதால் கொடி கழற்றப்பட்டது. 75 லட்சம் நிதி ஒருநாள் கூத்தில் முடிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பிரான இருந்த விஜயகுமாரின் பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்நிலையில் தன் பதவிக்காலம் முடிந்தாலும், தன் பெயரைச் சொல்லும்படியான திட்டத்தை அதேநாளில் கொண்டுவர முயன்றார் விஜயகுமார். அப்படித்தான் கன்னியாகுமரியில் 150 அடி உயரக் கொடிகம்பத்தில் பிரம்மாண்டமான தேசியக்கொடி நாட்ட முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசும் அனுமதி கொடுத்தது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினமே நடந்தது. தமிழகம், கேரளத்தில் மிக உயரமான தேசியக் கொடியாகவும் இது இருந்தது. இந்தக் கொடி வருடம் முழுவதும், 24 மணிநேரமும் பறக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விஜயகுமார் இந்தத் திட்டத்திற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 75 லட்சம் ரூபாய் ஒதுக்கியிருந்தார்.

ஆனால் கன்னியாகுமரியில் கடும் சூறைக்காற்றின் காரணமாக இந்த தேசியக்கொடி ஏற்றப்பட்ட ஒரேநாளில் கொடி சேதமானது. பச்சை வண்ணத்தில் கிழிந்திருக்கும் தேசியக்கொடியை சீரமைக்க இப்போது கொடியை கழற்றியுள்ளனர். மேலும் கன்னியாகுமரி அடிக்கடி சூறைக்காற்று வீசும் பகுதி என்பதால் சேதமாகாத வகையில் கொடி அமைக்கும் நுட்பம் குறித்தும் ஆய்வு நடக்கிறது.

75 லட்சம் நிதியில் உருவாக்கப்பட்ட திட்டம், ஒரேநாளில் காற்றில் சேதமாகி அவிழ்க்கப்பட்ட சம்பவம் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாப்பயணிகளை ஏமாற்றம் அடையவைத்துள்ளது.

x