மாவட்டங்களில் முகாமிடுவார்கள்... கூட்டத்தில் கைவரிசை காட்டுவார்கள்: குமரியில் சிக்கிய சென்னை கொள்ளை கும்பல்!


திருடுவதற்கென்றே சென்னையில் இருந்து குழுவாகக் கிளம்பி வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்றுபேர் கைது செய்யப்பட்டனர். இதில் தலைமறைவாக இருக்கும் மற்றவர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி- கேரள எல்லையோரப் பகுதியான தமிழகத்தின் புதுக்கடைப் பகுதியில் கோயில் கும்பாபிஷேகம் ஒன்று நடந்துவந்தது. இதில் அந்த கிராமத்துப் பெண்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த செயினைத் திருடினார். அப்போது அந்த பெண் கூச்சல் போடவே செயின் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த 3 பேரை பொதுமக்கள் சுற்றிவளைத்தனர். அவர்களை புதுக்கடை காவல்நிலையத்திலும் ஒப்படைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த குமாரவேல்(48), அவரது மனைவி குமாரி(40), கும்பிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(37) எனத் தெரியவந்தது. இவர்கள் அதே திருவிழாவில் திருடிய நகைகளை, இவர்கள் கும்பலில் இருந்து தப்பியோடியவர்களிடம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. உறவினர்களாக இவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக முகாமிட்டு கூட்டங்களிலும், பேருந்துகளிலும் திருடுவதை வழக்கமாகவே வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதில் குமாரி தக்கலை மகளிர் சிறையிலும், அவரது கணவர் குமாரவேல், மணிகண்டன் ஆகியோர் நாகர்கோவில் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

x