இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்ததால் தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5% லிருந்து 12.5% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதால், இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வு நாடான இந்தியா மே மாதத்தில் 6.03 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட ஒன்பது மடங்கு அதிகமாகும். மே மாதத்தில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 24.29 பில்லியன் டாலராக உயர்ந்தது.
தொற்றுநோய்க்குப் பிறகு தேவை அதிகரித்ததால் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தை இந்தியா கடந்த ஆண்டு இறக்குமதி செய்தது. பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை உயர்த்துவது என்பது இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 7.5 சதவீதமாக மத்திய அரசு குறைத்த நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
சீனா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் உள்நாட்டு சந்தையை வலுப்படுத்த தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.