சிங்கப்பூரின் செயற்கைக்கோள்களுடன் சீறிய இந்திய ராக்கெட்: வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53


சிங்கப்பூரின் டிஎஸ் -இஓ, நியூசர், ஸ்கூப் -1 ஆகிய 3 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

நேற்று மாலை 5 மணியளவில் தொடங்கப்பட்ட 25 மணி நேர கவுண்டவுன் முடிந்தவுடன் இன்று மாலை 6 மணியளவில் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கடல்சார் பாதுகாப்பு, பேரிடர் மீட்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இந்த ஏவுகணைகள் பயன்படும் என இஸ்ரோவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டில் மாணவர்கள் தயாரித்த 2.8 கிலோ கிராம் எடை கொண்ட சிறிய ரக ஸ்கூப் -1 என்ற செயற்கைகோளும் ஏவப்பட்டுள்ளது. மேலும், இதில் உள்ள 365 கிலோ எடையுள்ள டிஎஸ்-இஓ செயற்கைகோள் வண்ணப்புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது. 155 கிலோ எடைகொண்ட நியூசர் ஏன்ற செயற்கைக்கோள் அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான புகைப்படங்களை எடுக்கக்கூடிய திறன் கொண்டது.

வணிக ரீதியிலாக சிங்கப்பூரின் செயற்கைகோள்கள் இந்திய ஏவுகணை மூலமாக இப்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதன் காரணமாக உலக அளவில் இந்திய விண்வெளித்துறையின் மதிப்பு உயரும் என விண்வெளித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

x