லேப்டாப்பில் இருந்த பெண்களின் ஆபாசபட தடயங்களை அழித்தார்: நாகர்கோவில் காசியின் தந்தைக்கு ஜாமீன் மறுப்பு


சமூக வலைதளங்களில் பழகிய மாணவிகள், பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான நாகர்கோவில் காசியின் தந்தையின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சுஜி என்ற காசி. இவர் சமூக வலைதளங்கள் வழியாக அறிமுகமான மாணவிகள், பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக நெருக்கமாக பழகியுள்ளார். அத்துடன் அவர்களை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் பண மோசடி செய்தது உட்பட பல்வேறு வழக்குகளில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் 2020 முதல் காசி சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் காசியின் செல்போன், லேப்டாப்பில் இருந்த ஆபாச படங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியனை போலீஸார் கைது செய்தனர். இவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையில், "காசியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் அவர் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பெண்களை ஆசை வார்த்தை கூறி மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்திருப்பதற்கான தடயங்கள் இருந்தன. மேலும் பல்வேறு மாணவிகள், பெண்களின் முழு மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களும் அவர் வைத்திருந்தார்" எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி, "வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. இதனால் வழக்கின் 2-வது குற்றவாளியான காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார்.

x