கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு கொல்கத்தா சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் வசமாக சிக்கிக் கொண்டார் செல்போன் கடை உரிமையாளர். அவரை கைது செய்து கொல்கத்தா அழைத்து சென்றுள்ளது காவல்துறை.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சத்யா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(35). இவர், அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரிடம் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் 5 சிம் கார்டுகளை வாங்கியுள்ளார். வாங்கிய அவர், "ஐந்து சிம்கார்டுகளும் உங்கள் பெயரிலேயே இருக்கட்டும், வீடியோ கேம் விளையாட நான் அவற்றை பயன்படுத்திக்கொள்கிறேன். அதற்காக நான் உங்களுக்கு மாதம் தோறும் பணம் அனுப்புகிறேன்" என்று கூறி மாதந்தோறும் ராஜேந்திரனுக்கு பணம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், அந்த வடமாநில நபர் சமூக வலைதளங்களில் இருந்து பெண்களின் புகைப்படம் மற்றும் தொடர்பு எண்களை எடுத்து, அப்புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து பெண்களை மிரட்டி அவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளார். இச்சூழலில், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா, லால் பஜார் பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவரை மிரட்டிய அந்த வடமாநிலத்தவர், அப்பெண்ணிடம் 1.5 லட்சம் வாங்கியுள்ளார். மேலும், ரூ.3 லட்சம் பணம் வேண்டும் என்று மீண்டும் மிரட்டி உள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் லால் பஜார் சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து, கொல்கத்தா சைபர் க்ரைம் காவல்துறையினர் பிரச்சினைக்குரிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில், அந்த எண்ணிற்குரியவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து, வடமதுரை காவல்துறையினர் உதவியுடன் ராஜேந்திரனை நேற்று மாலை கைது செய்து, அவர், பயன்படுத்திய லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, கொல்கத்தா காவல்துறையினர் ராஜேந்திரனை வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி சசிகலாவிடம் கைது ஆணை பெற்று இன்று கொல்கத்தாவிற்கு அழைத்துச் சென்றனர்.