அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை பெருங்குடி காமராஜர் நகரில் கிரீன் ஏக்கர்ஸ் என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அக்குடியிருப்பில் உள்ள 15 நீளம், 15 அடி அகலம், 20 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பள்ளிக்கரணையை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பெரியசாமி(40), தட்சணாமூர்த்தி(38) ஆகியோர் வந்தனர். பின்னர் இருவரும் கழிவுநீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி இருவரும் தொட்டியில் மயங்கி விழுந்தனர். தகவல் அறிந்து வந்த குடியிருப்பு வாசிகள் கழிவுநீர் தொட்டியில் மயங்கி இருந்த இருவரையும் மீட்டனர். இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிய தட்சிணாமூர்த்தியை மீட்டு பெருங்குடி உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தட்சிணாமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த துரைப்பாக்கம் போலீஸார் உயிரிழந்த இரண்டு பேரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் நேற்று முன்தினம் மாதவரத்தில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய முயன்ற கூலி தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தது நினைவில் கொள்ளத்தக்கது.