ஹோட்டலி்ல் கழிவறைக்கு சென்ற பெண்ணை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த வாலிபரை கைது செய்த காவல்துறையினர், அவரை உடனே ஜாமீனில் விடுவித்தனர். இதனால், புகார் அளித்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் நேற்று இரவு புரசைவாக்கத்தில் உள்ள பிரபலமான ஹோட்டலுக்கு சாப்பிட வந்துள்ளார். பின்னர் அந்தபெண் உணவகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது, பக்கத்தில் ஆண் கழிப்பறையிலிருந்த வாலிபர் ஒருவர் செல்போனில் அந்த பெண்ணை படம் பிடித்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனே ஆண்கள் கழிப்பறையை மூடிவிட்டு கூச்சலிட்டு உள்ளார். உடனே ஓடிவந்த உறவினர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் அந்த வாலிபரை பிடித்து வைத்து வேப்பேரி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று செல்போனில் படம் பிடித்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது யூசுப்(22) என்பதும் இவர் புரசைவாக்கத்தில் தங்கி ஹோட்டல் அருகேயுள்ள பிரபல ஷாப்பிங் கடையில் ஊழியாக 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
பின்னர் போலீஸார் யூசுப்பின் செல்போனை ஆய்வு செய்தபோது, படம் எடுத்ததாக தெரிவித்த பெண்ணின் புகைப்படமோ, வீடியோ எதுவும் இல்லை. ஆனால் 10க்கும் மேற்பட்ட பெண்களை யூசுப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்திருப்பதை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் யூசுப் கழிப்பறைக்கு செல்லும் பெண்களை செல்போனில் படம்பிடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வாலிப வயசு காரணமாக இதுபோன்று செல்போனில் படம் பிடித்து விட்டதாக யூசுப் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீஸார் யூசுப் மீது சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை ஜாமீனில் விடுவித்தனர். போலீஸார் யூசுப் மீது சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு ஜாமீனில் விடுவித்ததால் புகார் அளித்த பெண் மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.