ஓரினச்சேர்க்கை கொலையில் வாலிபரின் ஆயுள் தண்டனை ரத்து: காவல்துறை விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாக நீதிபதிகள் கருத்து


ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த நண்பனைக் குத்திக் கொன்றதாக வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமரன். இவர் தனது நண்பர் தினேஷை சந்திக்கச் செல்வதாகக் கூறி, கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி வீட்டை விட்டுச் சென்றுள்ளார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பாததால், சதீஷ்குமரனின் தந்தை சத்தியமூர்த்தி, நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், 2006 ஏப்ரல் 12-ம் தேதி தேவனாம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் முன் தினேஷ் என்பவர் சரணடைந்தார்.

அப்போது, ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த போது அதை சதீஷ்குமரன் மறுத்ததால் இந்த விஷயத்தை அவர் வெளியில் சொல்லி விடக் கூடாது என்பதற்காக அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் தினேஷுக்கு எதிராகப் பதியப்பட்ட கொலை வழக்கை விசாரித்த கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், கடந்த 2018-ம் ஆண்டு தினேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தினேஷ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு, ஒப்புதல் வாக்குமூலத்தையும், ஆயுதம் கைப்பற்றியதையும் நம்ப மறுப்பதாகத் தெரிவித்தது. மேலும், சதீஷ்குமரனின் உடல் தினேஷின் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டதை மட்டும் வைத்து தண்டனை வழங்கியுள்ளதாகவும், சதீஷ்குமரனின் காதல் விவகாரம் குறித்து விசாரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. “பள்ளிக்காலத்தில் இருந்து சதீஷ்குமரனும், தினேஷும் நண்பர்களாக இருந்ததுடன், இருவரும் சில காலம் சென்னையில் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளனர். போலீஸ் தரப்பு வாதத்தின்படி தினேஷுக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்திருந்தால் இருவரின் நட்பு நீடித்திருக்காது. காவல் துறை விசாரணையில் பல குறைபாடுகள் உள்ளன ” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், தினேஷுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அவர் வேறு வழக்கில் கைது செய்யத் தேவைப்படாத பட்சத்தில், அவரை விடுதலை செய்ய வேண்டும்" என இன்று உத்தரவு பிறப்பித்தனர்.

x