2023-ல் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஜி20 மாநாட்டின் சில அமர்வுகளை காஷ்மீரில் நடத்த மத்திய அரசு திட்டமிடுவது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது. காஷ்மீர் தொடர்பான விவகாரம் என்பதால் பாகிஸ்தான் தனது பலத்தை எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறது. இதன் பின்னணி என்ன?
ஜி20 உறுப்பினர்கள்
ஜி20 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சீனா, துருக்கி, தென் கொரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் அங்கம் வகிக்கின்றன.
2020-ல் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்த ஜி20 மாநாட்டில் அடுத்த மாநாடு இந்தியாவில் நடத்தப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. கரோனா பெருந்தொற்று உள்ளிட்டவற்றின் காரணமாக 2023-ல் நடத்துவதாக முடிவுசெய்யப்பட்டது. 2021-ல் இத்தாலி தலைநகர் ரோமில் ஜி20 மாநாடு நடத்தப்பட்டது. 2022-ம் ஆண்டுக்கான ஜி20 மாநாடு இந்தோனேசியாவில் நவம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், இதன் அடுத்த மாநாடு இந்தியாவில் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜி20 டெல்லி மாநாடு என்றே பெயரிடப்பட்டிருக்கும் இம்மாநாடு பிரதானமாக டெல்லியில் நடக்கவிருக்கிறது. டெல்லியின் பிரகதி மைதானில் 2023 டிசம்பர் மாதம் இம்மாநாடு நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மாநாட்டின் சில அமர்வுகள் மட்டும் காஷ்மீரில் நடக்கவிருக்கின்றன. இந்தக் கூட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு, பருவநிலை மாற்றம் என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என உலகின் வல்லரசு நாடுகளுடன், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துவரும் சீனா, துருக்கி போன்ற நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்பது முக்கியத்துவமான தருணமாக அமையும் எனக் கருதப்படுகிறது. காஷ்மீரின் வளர்ச்சியை சர்வதேசச் சமூகத்தின் கண் முன்னே நிறுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று பாஜக ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் கொண்டிருக்கும் பார்வையும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் எனும் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பின்னர் நடத்தப்படவிருக்கும் மிக முக்கியமான சர்வதேச நிகழ்வாக இது அமையும்.
ஒருபக்கம் காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை, எல்லையில் ஊடுருவல் என எதிர்மறையான நிகழ்வுகள் காஷ்மீரில் அரங்கேறிவந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் காஷ்மீருக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. சர்வதேச வணிக நிறுவனங்களும் காஷ்மீரில் முதலீடு செய்ய முனைப்பு காட்டுகின்றன. இப்படியான சாதகமான சூழல்களை மனதில் கொண்டு துணிச்சலாக இந்த முடிவை மோடி அரசு எடுத்திருக்கிறது.
370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட பின்னர் காஷ்மீர் மண்ணில் கல்லெறிச் சம்பவங்கள், போராட்டங்கள் நடக்கவில்லை என பாஜக தரப்பு கூறிவருகிறது. போராட்டங்கள் இல்லாததால் கடையடைப்பு போன்ற சிக்கல்கள் இல்லாமல், வணிகம் தடைபடாமல் காஷ்மீர் மேம்பாடு அடைந்துவருவதாகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
ஜி20 மாநாட்டின் சில கூட்டங்களை காஷ்மீரில் எப்போது, எப்படி நடத்துவது என்பது குறித்து ஆராய ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து பேர் கொண்ட இந்தக் குழுவின் தலைவராக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ் குப்தா நியமிக்கப்பட்டிருக்கிறார். சுற்றுலாத் துறை, கலாச்சாரத் துறை, போக்குவரத் துறை, மற்றும் விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இடம்பெறுகிறார்கள். இந்தியாவின் சார்பில் இந்த மாநாட்டுக்கான தூதராக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
எதிர்க்கும் பாகிஸ்தான்
இவ்விஷயத்தில் பாகிஸ்தான் ஆரம்பம் முதலே அதிருப்தியை வெளிப்படுத்திவருகிறது. ஜி20 அமைப்பில் அந்நாடு அங்கம் வகிக்கவில்லை என்றாலும், காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதால் அங்கு ஜி20 மாநாடு நடத்தப்படுவதை எதிர்ப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘இந்தியா எடுக்கும் இதுபோன்ற முயற்சிகளை முற்றிலும் எதிர்ப்பதாகக் கூறியிருக்கிறது.
“சட்டம் மற்றும் நீதியின் முக்கியத்துவத்தை ஜி20 உறுப்பினர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள். இந்தியாவின் இந்த முயற்சியை அவர்கள் முற்றாக நிராகரிப்பார்கள்” என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலாளர் அசீம் இஃப்திகார் அகமது கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு சர்வதேச சமூகத்திடம் முறையிட்டுவரும் பாகிஸ்தான், 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்விஷயத்தில் தங்கள் தரப்புக்கு ஆதரவு திரட்ட பல்வேறு நாடுகளை அணுகியது. எனினும், அரபு நாடுகள் உட்பட எல்லா நாடுகளும், ‘இது இந்தியாவின் உள்விவகாரம்’ என்று ஒதுங்கிக்கொண்டன. இந்நிலையில், ஜி20 மாநாடு தொடர்பான பாகிஸ்தானின் எதிர்ப்புக்கு இதுவரை எந்த நாடும் எதிர்வினையாற்றவில்லை.