காவிரி டெல்டாவில் பருத்தி கொள்முதலில் இடைத்தரகர்கள் கொள்ளை: ஏல மையத்தை இழுத்து பூட்டி விவசாயிகள் போராட்டம்


மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டவர்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்வது 15 தினங்களாக நிறுத்தப் பட்டுள்ளதைக் கண்டித்து இன்று அதன் முன்பாக பருத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன் கலந்து கொண்டார்.

போராட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்," காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 15 தினங்களாக பருத்தி கொள்முதல் செய்வதில் வியாபாரிகள் என்கிற போர்வையில் செயல்படும் இடைத்தரகர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மிகப் பெரும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக அரசு கோடை நெல் சாகுபடியை கைவிட்டு மாற்று பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதன் விளைவாக விவசாயிகள் பெருமளவு பருத்தி சாகுபடியை மேற்கொண்டார்கள். பருத்திக்கு தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய் 80 பைசா குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

வியாபாரிகள் கடந்த 15 தினங்களுக்கு முன்னதாக ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கிலோ பருத்தியை ரூ.111 வரையிலும் கொள்முதல் செய்திருக்கிறார்கள். உற்பத்தி பெருகியவுடன் இடைத்தரகர்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு கிலோ 1-க்கு ரூ. 50 முதல் 60க்குள் கொள்முதல் என்ற பேரில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஓரிரு விவசாயிகளிடம் மட்டும் பெயரளவில் கொள்முதல் செய்துவிட்டு சென்று விடுகிறார்கள். அதனால் தங்கள் பருத்தியை வெளிச்சந்தையில் அடிமாட்டு விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

எனவே, தமிழக அரசு உடனடியாக உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்தும், பருத்திக் கொள்முதலை உரிய சந்தை விலையில் கொள்முதல் செய்து உடன் தொகையை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருத்தி தேவைப்படும் மாவட்டங்களில் இருக்கிற வியாபாரிகளை ஒருங்கிணைத்து தமிழக அரசே நேரடியாக கொள்முதலில் ஈடுபட்டு, இடைத்தரகர் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். இதனால் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. இதனைக் காரணம் காட்டி கொள்முதலை நிறுத்தி உள்ளதை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மன்னார்குடி மட்டுமின்றி காவிரி டெல்டா மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில 15 தினங்களுக்கும் மேலாக பல ஆயிரக்கணக்கான குவிண்டால் பருத்தி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். இதனைக் கண்டித்து மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூட ஏல மையத்தை விவசாயிகள் இழுத்து பூட்டி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்று பி ஆர் பாண்டியன் தெரிவித்தார்.

x