தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா, பொட்டாஷ், டிஏபி உள்ளிட்ட உரங்கள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூரிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்று உபகரணங்களை வழங்கினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கடலூர் மாவட்டத்தில் நிலவும் உரத்தட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. இதனால் கோபமடைந்த அமைச்சர், செய்தியாளரிடம் ஒருமையில் பேசிவிட்டு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.
அதன்பின்னர் அமைச்சர் தரப்பிலிருந்து உரத்தட்டுப்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான அளவு விதைகள் உரங்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
44,011 மெட்ரிக் டன் உரங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் கடைகள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட உள்ளது. தற்போதைக்கு 1,14,240 டன் யூரியா, பொட்டாஷ், டிஏபி ஆகியவை கையிருப்பில் உள்ளது. மொத்தம் 54 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் அளவுக்கு உரங்கள் கையிருப்பில் உள்ளது'' என தெரிவித்துள்ளார்.