`இதற்காகத்தான் மணக்கோலத்தில் சிலம்பம் சுற்றினேன்'- தாலிகட்டிய கையோடு அசத்திய திருநெல்வேலி மாப்பிள்ளை!


திருநெல்வேலியில் கல்யாண மாப்பிள்ளை தாலிகட்டிய கையோடு சிலம்பம் எடுத்து ஆடிய காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதை மணப்பெண் அருகில் நின்று வெட்கம் ததும்ப பார்க்கிறார்.

இப்போதெல்லாம் திருமண வீடுகள் நம் கலாச்சாரத்தையே கேள்விக்குறியாக்கி வருகிறது. ஆடல், மாடல் என அமர்க்களம் செய்வதோடு அதை வீடியோவாக எடுத்தும் தெறிக்க விடுகின்றனர். இந்த ரக போட்டோ, வீடியோ எடுப்பதற்கென்றே பிரத்யேக வீடியோ கலைஞர்களும் உருவாகிவிட்டார்கள். ஆனால் இப்படியான சூழலிலும் நெல்லையில் நம் மண் மணம் மாறாமல், தன் திருமணத்தில் தாலிகட்டிய கையோடு, மாப்பிள்ளை சிலம்பம் ஆடிய காட்சி பலரது கவனத்தையும் குவித்தது.

திருநெல்வேலி பொன்னாக்குடி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் பழனி. இவரது மகன் சங்கரநாதன், இவருக்கு மஞ்சு என்னும் பெண்ணோடு பொன்னாக்குடி அய்யா வைகுண்ட பதியில் வைத்து திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளை சங்கரநாதன் சிலம்பம் ஆடினார். அதை வெட்கம் ததும்ப புன்னகை மாறாமல் மணப்பெண் பார்த்து ரசித்தார். கூடவே திருமணத்திற்கு வந்திருந்த உறவுகளும் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதுகுறித்து சங்கரநாதன் கூறுகையில், “அடிப்படையில் நான் சிலம்பக் கலைஞர். சிலம்பம் கற்றுக்கொடுக்கும் பாட சாலையும் வைத்திருக்கிறேன். சிலம்பம் நம் பாரம்பர்யக் கலை. அதன் அருமை, பெருமைகள் இந்தத் தலைமுறையினருக்குத் தெரியவில்லை. அதனால் தான் அதை அடுத்தடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே மணக்கோலத்தில் சிலம்பம் சுற்றினேன். நம் பாரம்பர்ய கலையான சிலம்பத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது” என்று மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டு மீண்டும் சிலம்பம் சுற்றுகிறார் சங்கர நாதன்.

x