இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையில் பெட்ரோல் என 375 மில்லி சிறுநீரை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை முழுவதும் தனியார் பேருந்துகள் இயக்கம் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் வாங்கவும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் என சிறுநீரை விற்பனை செய்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கொழும்பில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது நீர்கொழும்பு.
இங்குள்ள தெல்வத்தை சந்தி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக டூவீலரில் நேற்று ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது எரிபொருள் இல்லாமல் டூவீலரில் ஒருவர் நின்றுள்ளார். அவரிடம் தன்னிடம் எரிபொருள் இருப்பதாக டூவீலரில் வந்தவர் கூறியுள்ளார். அப்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் டூவீலரில் வந்தவரிடம் 350 மில்லி பெட்ரோலை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி தனது டூவீலருக்கு போட்டுள்ளார். பெட்ரோலுக்காக பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த நபர் தனது வாகனத்தில் சென்று விட்டார். இதன் பின் தனது வாகனத்திற்கு பெட்ரோல் போட்டவர் ஸ்டார்ட் செய்துள்ளார். ஆனால், அது ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் பெட்ரோல் டியூப்பைக் கழட்டிப் பார்த்து போது அவர் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில், பெட்ரோலுக்குப் பதில் சிறுநீர் இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் இதுகுறித்து புகார் கூறியுள்ளார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுநீரை பெட்ரோல் என ஏமாற்றி பணப்பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.