விஷ வாயுவால் பறிபோன ஒப்பந்த ஊழியரின் உயிர்... ஒருவர் கவலைக்கிடம்: சென்னையில் நடந்த சோகம்


பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெரு அம்மா உணவகம் அருகே உள்ள பாதாள சாக்கடையில் நேற்று மாலை அடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அடைப்பை சுத்தம் செய்ய வேண்டி தஞ்சாவூரை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் நெல்சன் (26), ரவிகுமார் (40) ஆகியோர் ஜெட்ராட் இயந்திரத்துடன் சம்பவயிடத்திற்கு வந்தனர். அப்போது நெல்சன் கால்வாயின் மேல் மூடியை திறந்து உள்ளே பார்த்தபோது எதிர்பாராத விதமாக சாக்கடையில் இருந்து விஷவாயு தாக்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் சாக்கடையில் விழுந்தார்.

இதனை பார்த்து பதற்றமடைந்த சக ஊழியர் ரவிக்குமார் உடனே சாக்கடையின் உள்ளே எட்டிபார்த்த போது அவரும் விஷவாயு தாக்கி கால்வாய் உள்ளே விழுந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே மாதவரம் காவல் துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த மாதவரம் தீயணைப்பு துறை வீரர்கள் தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் சாக்கடைக்குள் இறங்கி இருவரையும் காப்பாற்ற போராடினர்.

நீண்ட நேரம் போராடி இருவரையும் வெளியே கொண்டு வந்தனர். பின்னர் இருவரையும் ஆம்புலன்ஸ்சில் ஏற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துமனை செல்லும் வழியிலேயே நெல்சன் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிய ரவிக்குமாரை மீட்டு ஆபத்தான நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் ரவிக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மாதவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நெல்சன் மற்றும் ரவிகுமார் கொளத்தூர் அடுத்த மாதனான்குப்பத்தில் தங்கி ஒப்பந்ததாரர் பிரகாஷ் என்பவரிடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தனியார் நிறுவனத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x