10 நாட்களாக மிரட்டல்... கண்டுகொள்ளாத ராஜஸ்தான் போலீஸ்: கன்னைய்யா லால் கொலையில் நடந்தது என்ன?


இஸ்லாமியர்களின் இறைத்தூதரான முகம்மது நபியை விமர்சித்த நுபுர் சர்மாவிற்கு ஆதரவளித்தவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பயங்கரத்தை, ராஜஸ்தானின் உதய்பூரில் நேற்று மாலை நடத்திய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து, தங்கள் இறைத்தூதர் விமர்சனத்தால் இஸ்லாமிய மக்கள் இடையே வன்முறை பரவுகிறதா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

கடந்த மே 27-ல் தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக செய்திதொடர்பாளர் நுபுர் சர்மா கலந்து கொண்டார். அப்போது அவர், இஸ்லாமியர்களின் இறைத்தூதரான முகம்மது நபியை விமர்சித்திருந்தார். இதனால், நாடு முழுவதிலும் இஸ்லாமியர்கள் இடையே கடும் கண்டனங்கள் எழுந்தன. ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிகழ்ந்த போராட்டங்கள், வன்முறையாகவும் மாறியன. உபியில் முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, நுபுர் சர்மாவை தன் கட்சி பதவிகளிலிருந்து இடைநீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டது. இஸ்லாமிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அளவிலும் இந்தியாவிற்கு கண்டனங்கள் எழுந்தன. இதன் பாதிப்புகள் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இந்தியர்கள் மீதும் ஏற்பட்டன. இதை சமாளிக்க மத்திய வெளியுறத்துறை அமைச்சகம் செயலில் இறங்கியது. நுபுர் மீது டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவாகின. எனினும், ஒருமுறை கூட நுபுர் விசாரணைக்கு எங்கும் ஆஜராகவில்லை.

இந்நிலையில், நுபுர் விவகாரத்தை மீண்டும் கிளறும் வகையில் ராஜஸ்தானின் உதய்பூரில் ஒரு பயங்கர சம்பவம் நேற்று பட்டப்பகலில் அரங்கேறி உள்ளது. இதன் முக்கிய கடைகளின் பகுதியான தானிய மண்டியில் கன்னைய்யா லால் டெலி(40) என்பவர் தையல் கடை வைத்து நடத்துகிறார். இவர் இரண்டு வாரங்களுக்கு முன் நுபுரின் விமர்சனத்தை ஆதரித்து ஒரு பதிவை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். இதற்கு கன்னைய்யா லால் மீது தானிய மண்டி காவல்நிலையத்தில் மூன்று புகார்கள் பதிவாகின. இதனால், ஜூன் 11-ல் கைது செய்யப்பட்ட கன்னைய்யாவிற்கு 15-ல் ஜாமீன் கிடைத்தது.

இந்நிலையில், நேற்று அவரது கடைக்கு துணி தைக்க வேண்டி என இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் வந்திருந்தனர். இறைச்சி வெட்டும் கத்திகளுடன் இருவரும் தன்னை வெட்ட வந்தவர்கள் என்பதை கன்னையா அறியவில்லை. வழக்கம்போல், ஆடைக்கான அளவுகளை எடுக்கத் தொடங்கியவர் திடீர் என வெட்டப்பட்டார். கன்னைய்யாவின் கழுத்தை அறுத்து போட்டு விட்டு இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். கன்னைய்யா லால் அங்கேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த பயங்கரத்தின் போது அங்கிருந்த சக தையல்காரர் ஈஸ்வர்சிங், கன்னைய்யாவை காப்பாற்ற முயற்சித்துள்ளார். இவருக்கும் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த ஈஸ்வர்சிங் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார். இதுவரை எங்குமே நடைபெறாத வகையிலான இந்த சம்பவத்தால், உதய்பூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், பல பகுதிகளில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

இது குறித்து கன்னைய்யாவின் குடும்பத்தார், அவரது 8 வயது மகன் விளையாட்டு போக்கில் நுபுர் ஆதரவு பதிவிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதனால், கன்னைய்யாவிற்கு உதய்பூரின் மூன்று இஸ்லாமியர்கள் கொலை மிரட்டலும் விடுத்திருந்தனர். இவர்களை நேரில் அழைத்த தானிய மண்டி காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர், இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்திருந்தார். பிறகு பிரச்சினை முடிந்து விட்ட நிலையில், கன்னைய்யாவின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

கன்னைய்யாவின் கொலையாளிகள் இருவரையும் அடுத்த சில மணி நேரத்தில் ராஜஸ்தான் போலீஸார் கைது செய்தனர். நண்பர்களான இவர்கள், முகம்மது ரியாஸ் அக்தரி, கவுஸ் முகம்மது ஆகியோர் என்பது தெரிந்தது. இருவரும், அருகிலுள்ள மாவட்டமான ராஜ்சமந்தின் பீமில் பிடிபட்டனர். இதற்கு முன்பாக இருவரும் கொலைக்கு பயன்படுத்தியக் கத்திகளுடன் ஒரு வீடியோ பதிவை சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். கன்னைய்யாவை கொலைசெய்த போதும் எடுத்த ஒரு வீடியோவும் இதில் இருந்தது.

பார்ப்பதற்கே பதைபதைக்கும் இரண்டு வீடியோக்களையும் ராஜஸ்தான் அரசு தடை செய்துள்ளது. இவற்றில் தங்களை மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் உருது மொழியில் பேசுகின்றனர். தங்கள் இறைத்தூதரை விமர்சித்தால், உடலிலிருந்த தலை தனியாகத் துண்டிக்கப்படுவதே தண்டனை என எச்சரித்துள்ளனர். இத்துடன் பிரதமர் நரேந்திரமோடி மூட்டிய நெருப்பை தாம் அணைத்ததாக கூறும் அவர்கள், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த இருவரில், முகம்மது ரியாஸ் தான் வாழும் பகுதியில் சிறிய மளிகைக்கடை நடத்தி வருகிறார். இத்துடன் அப்பகுதியின் மசூதிகளிலும் பொதுத்தொண்டாற்றி வந்தவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிந்துள்ளன. இவருடைய நண்பரான முகம்மது கவுஸ் அவருக்கு உதவியாக இருப்பவர். இதுபோன்ற பயங்கரங்களுக்கு பின் தீவிரவாதிகள் மட்டுமே அதன் மீதானப் பதிவுகளை இட்டு வந்தனர். இந்த சம்பவத்தில் முதன்முறையாக பொதுமக்களும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 17-ம் தேதி கன்னைய்யாலாலை கொல்வதாக முகம்மது அன்சாரி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால், கன்னைய்யாலாலின் உயிர் காக்கப்பட்டிருக்கும். இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டிய காவல்துறையினர் மீது ராஜஸ்தான் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, தானிய மண்டியின் உதவி ஆய்வாளர் பன்வர் லால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கன்னைய்யாலாலின் பாதுகாப்பில் அலட்சியம் காடியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கொலையாளிகளுக்கும் பாகிஸ்தான் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘தாவத்-எ-இஸ்லாமி’ அமைப்புடன் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளன. இதை உறுதிப்படுத்த மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உதய்பூர் வந்தடைந்துள்ளது. இந்த சம்பவத்தை பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. எந்த மதமும் வன்முறையை ஆதரிப்பதில்லை எனப் பலரும் அதில் குறிப்பிட்டுள்ளனர். எனினும், நாட்டின் வன்முறைகள் எந்த உருவத்திலும் எழாமல் தடுப்பது மத்திய, மாநில அரசுகளின் தார்மீகக் கடமை என்பது உணரப்படுவது அவசியம்.

x