தூக்கி வீசப்பட்ட நண்பர்கள்... எமனாக வந்த மணல் லாரியால் பறிபோன உயிர்கள்: இரவில் நடந்த சோகம்


இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு இளைஞர்களால் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்த சித்திக்கும் அவரது நண்பரும் நேற்று இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலுக்கு ஒரு வேலையாக வந்துவிட்டு நேற்று இரவு மீண்டும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தனர். மீமிசல் அருகேயுள்ள வெளிவயல் பாலம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே மணல் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. எதிரே வந்த லாரியை கண்டதும் சித்திக் நிலை தடுமாறியதால் அவரது இருசக்கர வாகனம் லாரியின் மீது மோதியது. அதனால் சித்திக்கும் அவரது நண்பரும் தூக்கி வீசப்பட்டனர். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்க லாரியை இடது புறமாக அதன் ஓட்டுநர் திருப்பினார். அப்போது அங்கு நடந்து வந்து கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பகவான், மற்றும் வேலிமங்கலத்தை சேர்ந்த ஆரோக்கியசெல்வம் ஆகியோர் மீது லாரி மோதியது.

இதில் லாரி மோதிய வேகத்தில் படுகாயம் அடைந்த பகவான், ஆரோக்கிய செல்வம் ஆகிய இருவரும் அங்கேயே உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த சித்திக்கின் நண்பரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த சித்திக்கை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்திக்கும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநர் திருவாரூரை சேர்ந்த சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இப்படி எதிர் பாராமல் நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x