குழுமூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தா?: 3 ஆம்புலன்ஸ்கள் மூலம் தேடுதல் பணி


அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது என்று பரவிய செய்தியை அடுத்து 3 ஆம்புலன்ஸ்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் முல்லையூர், வங்காரம், தளவாய், குழுமூர் போன்ற பல கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களின் மேல் இன்று காலை 11 மணி அளவில் ஒரு ஹெலிகாப்டர் செல்லும் சத்தம் அனைவருக்கும் கேட்டது. அந்த சத்தம் பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு நன்கு கேட்டதாகவும், அதன் பின்னர் திடீரென பெரியதாக ஒரு சத்தம் கேட்டதாகவும், அதன் பின்னர் சத்தம் கேட்பது நின்று விட்டதாகவும் இங்குள்ள மக்கள் கூறினார்கள்.

அந்த பெரிய சத்தம் ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியதாகத்தான் இருக்கும் என அப்பகுதி மக்களிடம் பரபரப்பான செய்தி பரவியது. இது இரண்டு மாவட்ட மக்களிடமும் வேகமாக பரவியது. அதனால் அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் ஏதேனும் விபத்து ஏற்பட்டுள்ளதா எனத் தேடிப் பார்த்தனர். இந்த சம்பவம் பெரிதாகப் பேசப்பட்டதால் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் சென்றது. அதனையடுத்து 3 ஆம்புலன்ஸ்கள் அப்பகுதிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நடத்திய விசாரணையில் விபத்து ஏற்பட்டதாக எந்த அடையாளமும் அங்கு கிடைக்கவில்லை. அதனையடுத்து ஆம்புலன்ஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் திரும்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கூறுகையில், "குழுமூர் பகுதியில் விமான விபத்து போல சத்தம் கேட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அப்படி எந்த நிகழ்வும் நடைபெறவில்லை" என தெரிவித்தார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக பரவிய செய்தி இரண்டு மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x