மகாராஷ்டிரத்தின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசைக் கவிழ்க்கும் முயற்சியில், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தீவிரம் காட்டிவரும் நிலையில், குவாஹாட்டியில் தங்கியிருக்கும் அவர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏ-க்கள் முதலில் குஜராத்திலும் பின்னர் அசாமிலும் முகாமிட்டிருக்கிறார்கள். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சிவசேனா கட்சி 55 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர். இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக சிவசேனா கட்சி மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள். பாஜகவுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியமைக்க வேண்டும் என்பதுதான் அதிருப்தித் தலைவர்களின் பிரதான நிபந்தனை. அதேசமயம், வேறு சில அரசியல் கணக்குகளும் உள்ளன.
106 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக, சிறிய கட்சிகள், சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஆகியோரின் ஆதரவுடன் 114 இடங்களுடன் வலிமை காட்டுகிறது. 50-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் தங்கள் தரப்பில் இருப்பதாகவும் அவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் சிவசேனா கட்சியினர் என்றும் ஏக்நாத் ஷிண்டே கூறிவரும் நிலையில், அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் கைகோத்து பாஜக ஆட்சியமைக்க முயற்சிப்பதாகவும் பேசப்படுகிறது.
எப்போது வேண்டுமானாலும் ஆட்சி பறிபோகலாம் எனும் அளவுக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சிவசேனா தலைமை, இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதில் ரொம்பவே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அசாம் தலைநகர் குவாஹாட்டியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் முகாமிட்டிருக்கும் அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு உத்தவ் தாக்கரே எழுதியிருக்கும் கடிதம் கவனம் ஈர்த்திருக்கிறது.
‘நீங்கள் எல்லோரும் குவாஹாட்டியில் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களில் பலர் எங்களுடன் தொடர்பில் இருக்கிறீர்கள். நீங்கள் மனதளவில் சிவசேனைகள். நாம் பேசுவோம். பேசி ஒரு முடிவெடுப்போம்’ எனத் தொடங்கும் அந்தக் கடிதத்தில், ‘இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. தயவுசெய்து வாருங்கள். என்னுடன் அமர்ந்து பேசுங்கள். சிவசேனா தொண்டர்கள், பொதுமக்கள் மனதில் இருக்கும் எல்லா சந்தேகங்களையும் போக்குவோம்’ என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
‘சிவசேனாவில் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மரியாதை வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது. நீங்கள் நேருக்கு நேராக என்னைச் சந்தித்தால் இதற்கு ஒரு வழியை நாம் நிச்சயம் கண்டடையாலாம். சிவசேனாவின் தலைவராகவும், குடும்பத்தின் தலைவராகவும் நான் உங்களைப் பற்றி இப்போதும் கவலைப்படுகிறேன். தயவுசெய்து திரும்பிவாருங்கள்... பேசுங்கள்’ என்று உருக்கமான தொனியில் அந்தக் கடிதம் நீள்கிறது.
விரைவில் அதிருப்தி எம்எல்ஏ-க்களிடமிருந்து இதற்கு எதிர்வினை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.