‘சிவசேனாவை ஒழித்துக்கட்ட சரத் பவாரும் சஞ்சய் ராவத்தும் சதி செய்கிறார்கள்!’


தீபக் கேஸர்கர்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசை நடத்திவரும் சிவசேனாவில் நடந்துவரும் அரசியல் கலகம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை அடைந்துவருகிறது. அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏ-க்கள் முதலில் குஜராத்திலும் பின்னர் அசாமிலும் முகாமிட்டிருக்கிறார்கள். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சிவசேனா கட்சி 55 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர். இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக சிவசேனா கட்சி மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது அசாமில் தங்கியிருக்கும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள், இந்தப் பிரச்சினைக்குக் காரணமே சிவசேனா மாநிலங்களவை எம்.பி-யான சஞ்சய் ராவத் தான் எனக் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

அசாம் தலைநகர் குவாஹாட்டியில் இருக்கும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மனதளவில் இறந்துவிட்டதாகவும், நடைபிணங்களாக இருக்கும் அவர்கள் மும்பை திரும்பியதும் உடற்கூராய்வுக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் சஞ்சய் ராவத் பேசியிருந்தார். இது அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மத்தியில் கடும் கோபத்தைக் கிளப்பியிருக்கிறது. தாங்கள் செய்வது அரசியல் கலகம் அல்ல என்றும், கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்றவே இப்படிச் செய்வதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக, ட்விட்டரில் ஒரு பகிரங்கக் கடிதத்தைப் பகிர்ந்திருக்கிறார் அசாமில் தங்கியிருக்கும் சிவசேனா எம்எல்ஏ தீபக் கேஸர்கர். அதில் சஞ்சய் ராவத் மீதும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மீதும் அவர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது சஞ்சய் ராவத் உமிழ்ந்துவந்த வெறுப்புப் பேச்சுக்களின் காரணமாகவே பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது எனக் குற்றம்சாட்டியிருக்கும் தீபக் கேஸர்கர், மேலும் பல புகார்களை அந்தக் கடிதத்தில் பதிவுசெய்திருக்கிறார்.

சஞ்சய் ராவத்

‘சஞ்சய் ராவத் வழங்கும் ஆலோசனையின்படி சிவசேனா கட்சி நடத்தப்படுவது துரதிருஷ்டவசமானது. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அல்ல. அவர் சிவசேனா கட்சியை ஒழித்துக்கட்ட திட்டமிடுபவர். சிவசேனா கட்சி பாஜகவிடமிருந்து விலகி நிற்கலாம். ஆனால், இந்துத்வா கொள்கையிலிருந்து விலகி நின்றால் அதை எப்படி எங்களால் பொறுத்துக்கொள்ள முடியும்?’ என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

‘முதல்வர் உத்தவ் தாக்கரேயையும் எங்களையும் பிரித்து ஒரு கொடும் குற்றத்தை சஞ்சய் ராவத் செய்துவிட்டார். அவரது தோளில் அமர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுகிறது. அதில் குண்டடிபடுபவர்கள் எதிரிகள் அல்ல, விசுவாசிகளான நாங்கள்தான். இதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறியிருக்கும் தீபக் கேஸர்கர், மகாராஷ்டிர மக்கள் சிவசேனா - பாஜக கூட்டணிக்குத்தான் வாக்களித்தனர் எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சரத் பவார், சோனியா காந்தி ஆகியோரைத் திருப்திப்படுத்த சிவசேனா தனது சுயத்தை இழந்துவிட்டதாக விமர்சித்திருக்கும் அவர், தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் நவாப் மாலிக்கைச் சுட்டிக்காட்டி, ‘அப்படிப்பட்ட அமைச்சரை நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும்?’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் இருப்பதால், காஷ்மீரில் 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்டது தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் சிவசேனா எம்.பி-க்களால் சுதந்திரமாகக் கருத்து தெரிவிக்க முடியவில்லை என்றும் தீபக் கேஸர்கர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

x