பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க அரசு கடந்த ஆண்டு கேட்டுக்கொண்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) லூமென் டேட்டாபேஸ் எனும் நிறுவனத்திடம் தாக்கல் செய்த ஆவணத்தில் இதை ட்விட்டர் நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
இணையத்தில் உள்ள தகவல்களை நீக்குவது தொடர்பாக சமூகவலைதளங்கள், இணையதளங்கள் முன்வைக்கும் சட்டபூர்வமான புகார்கள் மற்றும் கோரிக்கைகளைச் சேகரித்து ஆய்வுசெய்யும் நிறுவனம் லூமென் டேட்டாபேஸ். இணையப் பயன்பாட்டாளர்கள் தங்கள் உரிமைகளைத் தெரிந்துகொள்ளவும், சட்டத்தைப் புரிந்துகொள்ளவும் இந்த நிறுவனம் உதவி செய்கிறது. முடக்கப்பட வேண்டும் என்று தங்களுக்கு அனுப்பப்படும் சமூகவலைதளக் கணக்குகள், இணையப் பக்கங்கள் குறித்த தகவல்களை லூமென் டேட்டாபேஸ் நிறுவனத்துக்கு கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அனுப்புகின்றன. அதேசமயம், சம்பந்தப்பட்ட இணையப் பக்கங்களை அந்நிறுவனங்கள் முடக்கிவிட்டனவா என்பது குறித்த தகவல்கள் லூமென் டேட்டாபேஸ் நிறுவனத்தின் தரவுத்தளத்தில் இருக்காது.
இந்நிலையில் இணையத்தில் ஜனநாயகம், அரசியல் சுதந்திரம், மனித உரிமைகள், பேச்சுரிமை ஆகியவை தொடர்பாக ஆய்வு நடத்தும் சர்வதேச செயற்பாட்டுக் குழுவான ஃப்ரீடம் ஹவுஸ் வெளியிட்ட குறிப்பிட்ட சில ட்வீட்களை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. 2021 ஜனவரி 5 முதல் 2021 டிசம்பர் 29 வரை அரசு இதற்கான கோரிக்கைகளை ட்விட்டர் நிறுவனத்துக்கு அரசு அனுப்பியது தெரியவந்திருக்கிறது.
2020-ம் ஆண்டில் இந்தியாவில் இணையச் சுதந்திரத்தின் நிலை குறித்து ஃப்ரீடம் ஹவுஸ் அமைப்பு வெளியிட்ட சில ட்வீட்டுகளை நீக்க வேண்டும் என ட்விட்டரிடம் மத்திய அரசு கோரியிருந்தது. மேலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் ராணா அய்யூப், சி.ஜே.வெர்லிமன் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளை முடக்கவும், குறிப்பிட்ட சிலரது ட்வீட்டுகளை நீக்கவும் அரசு கேட்டுக்கொண்டது. கிஸான் ஏக்தா மோர்ச்சா அமைப்பின் ட்விட்டர் பக்கத்தையும் முடக்கக் கோரியிருந்தது.
இந்தத் தகவல் வெளியானதையடுத்து, வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான சம்யுக்தா கிஸான் மோர்ச்சா (எஸ்கேஎம்) மத்திய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல், ராணா அய்யூப், வெர்லிமன் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதை, பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேசக் குழு (சிபிஜே) கண்டித்திருக்கிறது.
இதுதொடர்பாக விளக்கம் கோரி பிடிஐ செய்தி நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் இதுவரை பதில் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.