ஆன்லைன் சூதாட்டத்திற்கு வருகிறது தடை: பரிந்துரைகளை அளித்தது குழு!


ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் கடந்த அதிமுக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் வகையில் அவசர சட்டம் இயற்றியது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், முழுமையாக ஆய்வு செய்யாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதித்துள்ளதாகக் கூறி, உச்ச நீதிமன்றம் அந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்தது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி குறித்து ஆய்வு செய்யக் கடந்த 10-ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்தார்.

ஆன்லைன் ரம்மியால் ஏற்படக்கூடிய நிதி இழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரியத் தரவுகளுடன் ஆராயவும், ஆன்லைனில் விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரியப் பரிந்துரைகளை அளிக்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த குழு ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டத்தில் இடம்பெற வேண்டிய பரிந்துரைகளை வல்லுநர் குழு மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கியது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. விரைவில் ஆன்லைன் சூதாட்ட தடை அவரச சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

x