கொடைக்கானல்-பழனி பிரதான மலைச்சாலையில் தற்கொலை செய்து கொள்வதற்காக சொகுசு காருடன் 100 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்-பழனி பிரதான மலைச்சாலை பில்லூர் எஸ்டேட் அருகே சுமார் 100 அடி பள்ளத்தில் சொகுசு கார் ஒன்று இன்று காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டுனர்களும், அப்பகுதி மக்களும் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இணைந்து 100 அடி பள்ளத்தில் இறங்கி, கவிழ்ந்த காரில் லேசான காயங்களுடன் இருந்தவரை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தினால் பில்லூர் எஸ்டேட் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பரபரப்பும் நிலவியது.
விபத்தில் காயமடைந்த அன்பரசன் கூறுகையில், "நான் தஞ்சாவூரில் உள்ள முல்லைநகரில் எனது இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். சொந்தமாக கம்ப்யூட்டர் சென்டரும் நடத்தி வருகிறேன். எனது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்ய முடிவெடுத்து கொடைக்கானல் வந்து தற்கொலைக்கு முயன்றேன்" என்றார்.