‘இரு தொகுதிகளிலும் தோல்வி... யார் இனி பி டீம்?’ - சமாஜ்வாதியை சரமாரியாக விமர்சிக்கும் ஒவைசி


உத்தர பிரதேசத்தின் ஆசம்கர் மற்றும் ராம்பூர் மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றிபெற்றிருக்கும் நிலையில், பாஜகவை வீழ்த்தும் வலிமை சமாஜ்வாதி கட்சிக்கு இல்லை என அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசதுதீன் ஒவைசி விமர்சித்திருக்கிறார். இனி எந்தக் கட்சியை பி-டீம் என சமாஜ்வாதி கட்சியினர் அழைப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

2019 மக்களவைத் தேர்தலில் ஆசம்கர் தொகுதியில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 2022 பிப்ரவரியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மாநில அரசியலில் கவனம் செலுத்த முடிவெடுத்த அவர், சட்டப்பேரவை உறுப்பினராகவே தொடரும் வகையில் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியான ஆசம்கர் மக்களவைத் தொகுதிக்கு ஜூன் 23-ல் இடைத்தேர்தல் நடந்தது. அதேபோல், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஆசம் கான், உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ராம்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரான அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ராம்பூர் மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. ஜூன் 23-ல் பஞ்சாபின் சங்ரூர் தொகுதி மக்களவைத் தொகுதி, டெல்லியின் ராஜீந்தர் நகர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் மண்டர், ஆந்திர மாநிலத்தின் ஆத்மகூர், திரிபுராவின் அகர்தலா, டவுன் போர்டோவாலி, சுர்மா, ஜுபரஜ்நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதே நாளி இடைத்தேர்தல் நடைபெற்றன.

தேர்தல் முடிவுகள் நேற்று (ஜூன் 26) வெளியாகின. இதில், ஆசம்கர், ராம்பூர் ஆகிய இரு தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருக்கிறது.

ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் முகமது அசீம் ராஜாவை பாஜகவின் கண்ஷ்யாம் சிங் வென்றார். ஆசம்கர் தொகுதியின் பாஜக வேட்பாளர் தினேஷ் லால் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவை வீழ்த்தினார்.

சமாஜ்வாதி கட்சியின் இரு முக்கியத் தலைவர்களின் கைவசம் இருந்த தொகுதிகளை பாஜக வென்றிருக்கும் நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுதீன் ஒவைசி, சமாஜ்வாதி கட்சியை சரமாரியாக விமர்சித்துவருகிறார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஒவைசி, “பாஜகவை வீழ்த்தும் வலிமை சமாஜ்வாதி கட்சியிடம் இல்லை என்பதையும், அக்கட்சிக்கு அறிவு நேர்மை இல்லை என்பதையும் இடைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அருகதையற்ற இதுபோன்ற கட்சிகளுக்குச் சிறுபான்மைச் சமூகத்தினர் வாக்களிக்கக் கூடாது. இப்போது பாஜக பெற்றிருக்கும் வெற்றிக்கு யார் பொறுப்பு? இப்போதி யாரை அவர்கள் பி- டீம், சி- டீம் என்றெல்லாம் முத்திரை குத்துவார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

இரு தொகுதிகளிலும் அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்யவில்லை. மாறாக, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பல முறை பிரச்சாரம் செய்தார். இதைச் சுட்டிக்காட்டியிருக்கும் ஒவைசி, “தொகுதி மக்களைச் சந்திக்க செல்லாதது அகிலேஷ் யாதவின் ஆணவத்தைக் காட்டுகிறது” என்று கூறினார். மேலும், நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென அரசியல் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடுவதால், சிறுபான்மையினரின் வாக்குகள் பிரிந்து பாஜகவுக்குச் சாதகமாகத் தேர்தல் முடிவுகள் அமைவதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு. குறிப்பாக, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கட்பந்தனின் தோல்விக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியும் ஒரு காரணியாகப் பேசப்படுகிறது. சீமாஞ்சல் பகுதியில் அக்கட்சி 5 தொகுதிகளில் வென்றது. 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் இவற்றில் 4 தொகுதிகளில் மகா கட்பந்தன் கூட்டணி வென்றது கவனிக்கத்தக்கது.

x