`என்னுடைய மகளை காணவில்லை'- தந்தை புகாரால் நித்யானந்தா ஆசிரமத்தில் போலீஸ் சோதனை


நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து தனது மகளை மீட்டுத் தரக் கோரி பெங்களூருவை சேர்ந்த தந்தை ஒருவர் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஆசிரமத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஸ்ரீ நாகேஷ்-மாலா தம்பதி. நித்யானந்தா சீடர்களான இவர்கள் தங்களது மூத்த மகள் வர்தினியை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்துள்ளனர். இந்தநிலையில், இவர்கள் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "பெங்களூருவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து தன்னுடைய மகளை திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தோம்.

தற்போது, திருண்ணாமலையில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து எனது மகளை காண்பிக்க வேண்டும் என்று கூறினோம். அப்போது அவர்கள், உங்கள் மகள் இங்கு இல்லை என்று தெரிவித்தனர். மேலும், எங்களை வலுக்கட்டாயமாக ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றினர். ஆசிரம நிர்வாகிகள் எனது மகளை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்திக்கின்றனர். எனவே எனது மகளை காவல்துறையினர் விரைந்து மீட்டு தர வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

இந்தப் புகாரின்பேரில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, இளம்பெண் வர்தினி அங்கு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x