மதுரை காமராஜர் பல்கலையில் மாயமான விடைத்தாள்கள் பழைய கடையிலிருந்து மீட்பு: அதிர்ச்சி தகவல்


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாயமான விடைத்தாள்கள் பழைய கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி மூலம் ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்களின் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சென்ற ஆண்டு நடைபெற்ற ஆன்லைன் தேர்வின் விடைத்தாள்கள் தபால் மூலம் காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தொலைநிலை கல்வி மையத்தின் விடைத்தாள் வைக்கும் பகுதிகளான A மற்றும் B பிளாக்குகளில் வைக்கப்பட்ட தேர்வு வினாக்கள் மாயமாகியுள்ளது. இதுகுறித்து தொலைநிலைக்கல்வி கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தொலைநிலைக்கல்வி தேர்வு ஆணையர் தர்மராஜ், கூடுதல் தேர்வு ஆணையர் ராமகிருஷ்ணன் ஆகியோர் விடைத்தாள்கள் வைக்கப்பட்ட பிளாக்குகளை ஆய்வு செய்ததில் வினாத்தாள்கள் சிதறிக்கிடந்தன.

அதில் இருந்த ஆன்லைன் தேர்வு எழுதிய 15 கட்டுகள் மாயமானது குறித்து முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் இதுகுறித்து விசாரணை நடத்த தொலைநிலைக்கல்வி தேர்வு ஆணையர் தர்மராஜ், கூடுதல் தேர்வு ஆணையர் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் மாயமான தொலைநிலை கல்வி தேர்வு வினாத்தாள் குறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து விசாரணை செய்ததில் பழைய பேப்பர் கடைகளில் இருந்து திருடுபோன விடைத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் விடைத்தாள்களை திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொலைநிலை கல்வி மையத்தில் வினாத்தாள்கள் வைக்கப்பட்ட பிளாக்கின் கண்ணாடிகள் உடைந்து பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது. மேலும் தொலைநிலை கல்வி மைய அதிகாரிகளும் பணியில் அலட்சியமாக செயல்படுவதே இதுபோன்று தவறுகள் காரணமாகவும் அமைகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

x