`செவளை நிறம், வெள்ளை கொம்பு... ஜெர்சி பசு காணவில்லை': போஸ்டர் ஒட்டி மாட்டை கண்டுபிடித்த உரிமையாளர்!


காணாமல் போன பசுவிற்கு போஸ்டர் அடித்த ராஜேஷ்

பாசிங்காபுரம் பகுதியில் காணாமல் போன ஜெர்சி பசு குறித்து போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், மீண்டும் அந்த பசு உரிமையாளருக்கு கிடைத்துள்ளது.

மதுரை மாவட்டம், பாசிங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சொந்தமாக மூன்று மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெர்சி வகையைச் சேர்ந்த அவரது மாடு ஒன்று அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் போது காணாமல் போனது.

மாடு வாங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், காணாமல் போனதும் மனம் உடைந்த ராஜேஷ், மாட்டை கண்டு பிடிப்பதற்காக அப்பகுதியில் போஸ்டர்களை ஓட்டினார். அதில், "காணவில்லை ஜெர்சி பசு" என்று குறிப்பிட்டு, அதன் அங்க அடையாளாக "செவளை நிறம், வெள்ளை கொம்பு" என்றும், "கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்" என்றும் குறிப்பிட்டிருந்தார். அதனை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார்.

இச்சூழலில், காணாமல் போன மாடு திரும்பி கிடைத்துள்ளது. இது குறித்து அவர் காமதேனுவிடம், "பாசிங்காபுரம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு திடீரென காணாமல் போனது. நண்பர்களின் ஆலோசனைக் கிணங்க எங்கள் பகுதிகளைச் சுற்றி போஸ்டர் ஒட்டினோம். இந்நிலையில், நேற்று பொதும்பு பகுதியில் உள்ள அதலை கண்மாயில் ஜெர்சி பசு ஒன்று நிற்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக நேரில் சென்று அங்க அடையாளங்களை வைத்து எங்களது மாடு என்பதை உறுதி செய்தோம். மேலும், மாட்டை கண்டுபிடித்துக் கொடுத்தவர் எங்களது உறவினர் என்பதால் தனக்கு சன்மானம் வேண்டாம் என்று கூறிவிட்டார். தொடர்ந்து, மாட்டினை எங்கள் தொழுவத்திற்கு அழைத்து வந்தோம்" என்றார்.

x