தாயகம் திரும்பிய இந்திய அணி முதல் சேலம் அதிமுக நிர்வாகி கொலை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் 


> வெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி: வெற்றிக் கோப்பையுடன் வியாழக்கிழமை அதிகாலையில் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தங்கும் ஐடிசி மவுரியா ஹோட்டல் வரை வழிநெடுகிலும் திரண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

> அசாம், மணிப்பூரில் தொடரும் மழை பாதிப்பு: தொடர் கனமழை காரணமாக அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இரு மாநிலங்களிலும் மொத்தம் 48 இறப்புகள் பதிவாகியுள்ளன, அசாமில் 46 இறப்புகளும், மணிப்பூரில் இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன. அசாமில் புதன்கிழமை வெள்ள நீரில் மூழ்கி 8 பேரும், மணிப்பூரில் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இரண்டாவது அலை வெள்ளத்தால் 29 மாவட்டங்களில் 16.25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அசாமின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. இதற்கிடையில், மணிப்பூரில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் கடும் வெள்ளப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

> “உ.பி. கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து போலே பாபா அறிக்கை: 121 உயிர்கள் பலியான ஹாத்ரஸ் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம் என போலே பாபா தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கு பின் தலைமறைவானவர் முதல்முறையாக அதன் மீது கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில், "பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றவர்கள் விரைந்து நலம் பெற கடவுளை வேண்டுகிறேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் அங்கிருந்து உடனடியாக வெளியேறி விட்டேன். இதனால், அங்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. சில சமூகவிரோதிகள் தான் இந்த நெரிசல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

> விண்வெளிக்கு முன்பாக பிரதமர் மணிப்பூருக்குச் செல்ல வேண்டும்: விண்வெளிக்குச் செல்வதற்கு முன்பாக உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லவேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். முன்னதாக, விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் இந்தியாவின் முதல் பயணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஒருவராக செல்லாம் என்று இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்ததாக வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி இவ்வாறு விமர்சித்துள்ளார்.

> ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா ராஜினாமா: ராஜஸ்தான் அமைச்சர் பதவியில் இருந்து கிரோடி லால் மீனா ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தனது பொறுப்பில் உள்ள 7 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் கட்சி தோல்வியடைந்தால் தான் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது சொந்த தொகுதியான தவுசா உட்பட சில தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தைத் தொடர்ந்து இந்த ராஜினாமா நடந்துள்ளது.

> சேலத்தில் அதிமுக முன்னாள் மண்டலக் குழு தலைவர் கொலை: சேலத்தில் அதிமுக பகுதிச் செயலாளரும் மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவருமான சண்முகம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பற்றி அறிந்த அன்னதானப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனிடையே, சண்முகம் கொலை செய்யப்பட்டதை அறிந்த சேலம் அதிமுக நிர்வாகிகள் தாதகாப்பட்டிக்கு திரண்டனர். இதனால் அந்த வழியில் போக்குவரத்து பாதித்து.

> சேலம் அதிமுக நிர்வாகி கொலையில் உடனடி நடவடிக்கை தேவை - இபிஎஸ்: சேலத்தில் அதிமுக பகுதிச் செயலாளரும், மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவருமான சண்முகம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை சாடியுள்ளார். அதோடு சண்முகத்துக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. தினசரி கொலை, கொள்ளை நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது என்று பலமுறை நான் கூறியபோதும், இந்த திமுக அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

இச்சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

> சி.வி.சண்முகம் பெயரில் சமூக வலைதளத்தில் அவதூறு: விக்கிரவாண்டி இடைத் தேர்தலை மையப்படுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரில் சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, “புரட்சித்தலைவி அம்மாவின் பெயரையோ, போட்டோவையோ பயன்படுத்த பாமகவுக்கு எந்த யோக்கியதையும் கிடையாது. பாஜகவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அதிமுகவை அழிக்க நினைத்த பாமகவுக்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான்” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரில் சமூக வலைதளத்தில் ஒரு செய்தி உலா வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுகவினர் பாமகவின் மாம்பழச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

> கோட்டாவில் 16 வயது மாணவர் சடலமாக மீட்பு: இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கூட்டுப் பயிற்சி (நீட்) தேர்வுக்கு தயாராகி வந்த பிஹார் மாநிலம் நாளந்தாவைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர் பயிற்சி மையங்கள் அதிகமாக உள்ள ராஜஸ்தானின் கோட்டாவில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

> எல்லைப் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க இந்தியா சீனா ஒப்புதல்: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கஜகஸ்தானில் வியாழக்கிழமை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ-யைச் சந்தித்தார். அப்போது இரண்டு அமைச்சர்களும், தங்கள் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதாக தெரிவித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

x