கோயில் பெயரில் போலி இணையதளங்கள்...20 கோடி ரூபாய் நன்கொடையை சுருட்டிய அர்ச்சகர்கள்!


கர்நாடக மாநிலத்தின் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள தேவலகனாபூர் கோயிலை சேர்ந்த அர்ச்சகர்கள், அக்கோயிலின் பெயரில் 8 போலி இணையதளங்களை உருவாக்கி பக்தர்களிடமிருந்து சுமார் 20 கோடி ரூபாய் நன்கொடையை அவர்களின் தனிப்பட்ட வங்கிக்கணக்குக்கு மாற்றியதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வடக்கு கர்நாடகாவின் அப்சல்பூர் தாலுகாவில் கங்காபூர் ஆற்றில் அமைந்துள்ள தேவலகனாபூர் கோயிலில் தெய்வமான ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட கர்நாடக மாநிலம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த நிலையில், தத்தாத்ரேயா தேவாலயம், கனகபூர் தத்தாத்ரேயர் கோவில், ஸ்ரீ க்ஷேத்ர தத்தாத்ரேயர் கோவில் போன்ற பெயர்களில் சுமார் 8 இணையதளங்களை உருவாக்கி, கடந்த 4 ஆண்டுகளாக 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான நன்கொடைகளை பெற்ற அர்ச்சகர்கள் அவற்றை தங்களது வங்கிக்கணக்குக்கு அனுப்பிக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த இணையதளம் மூலம் பல்வேறு பூஜைகள் மற்றும் இதர சடங்குகளை நடத்துவதற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை இவர்கள் கட்டணம் வசூலித்தனர்.

இந்த கோயில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது, கல்புர்கி துணை கமிஷனர் யஷ்வந்த் குருகர் இக்கோயிலின் வளர்ச்சிக் குழுவின் தலைவராக உள்ளார். குருகர் தலைமையில் சமீபத்தில் நடந்த தணிக்கைக் குழு கூட்டத்தில்தான் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் காவல்துறை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தது.

சைபர் க்ரைம் காவல்துறை வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையின் மூலம் கிட்டத்தட்ட 2,000 பக்தர்கள் இந்த போலி இணையதளங்கள் மூலம் பணம் செலுத்தியதாகத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது உண்டியல் பணம் எண்ணும் போதும் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அர்ச்சகர்களிடமிருந்து பணத்தை மீட்க கல்புர்கி துணை கமிஷனர் யஷ்வந்த் குருகர் உத்தரவிட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட அர்ச்சகர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர், அவர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

x