விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் 100% மானியத்தில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் திருச்சி மாவட்டத்தில் இன்று தொடங்கப்பட்டது.
தமிழக முதல்வர் அறிவிப்பின்படி, திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடித் தொகுப்பு வழங்கும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தமது சொந்த மண்ணான லால்குடி பகுதியில் இன்று தொடங்கி வைத்தார்.
லால்குடி எல்.அபிஷேகபுரத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தலைமையில் இன்று நடைபெற்ற விழாவில் குறுவை சாகுபடித் தொகுப்பு வழங்கும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து, நூறு சதவீதம் உர மானியத்தில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடித் தொகுப்பினையும் வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில், குறுவை சாகுபடித் தொகுப்பானது, இலால்குடி ஒன்றியத்தில் 5200 ஏக்கர், திருவெறும்பூர் ஒன்றியத்தில் 250 ஏக்கர், அந்தநல்லூர் ஒன்றியத்தில் 150 ஏக்கர், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் 100 ஏக்கர் என மொத்தம் 5,700 ஏக்கர் அளவில், செயல்படுத்தப்படுகிறது.
ஏக்கர் ஒன்றிற்கு ரூ.2,466.50 மதிப்பில் நூறு சதவீத மானியத்தில் 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி உரம், 25 கிலோ எம்ஓபி உரம் ஆகியவை கொண்ட குறுவை சாகுபடித் தொகுப்பினை 5,700 விவசாயிகளுக்கு ரூ.140.59 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டு பயன் பெறுவார்கள்.
இதில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முருகேசன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தி.ஜெயராமன் மற்றும் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.