ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குநர் உள்ளிட்ட ஐந்து பேரைக் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை விடுவிக்கவும், டெபாசிட் பணத்தை திரும்ப அளிக்க அதிகாரிகளை நியமித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் 13 இடங்களில் கிளைகள் உள்ளன. தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி சுமார் 1,600 கோடி வரை பொதுமக்களிடம் வசூல் செய்துள்ளது. பொதுமக்களிடமிருந்து வசூலித்த பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்குத் திரும்பக் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாகச் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அந்த நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் உட்பட 14 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. “டெபாசிட் செய்தவர்களுக்கு பணத்தைத் திருப்பி வழங்கி வருகிறோம். வழக்கின் காரணமாக வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தைத் திருப்பித்தர இயலவில்லை. டெபாசிட்தாரர்களுக்கு பணத்தைத் திரும்பத் தரத் தயாராக இருப்பதால், முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை விடுவிக்க வேண்டும் “ என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து “பணத்தைத் திருப்பித் தருவார்கள் என்ற உத்தரவாதத்தை நம்ப முடியாது. முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை விடுவித்தால் பணத்துடன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பிருக்கிறது” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், “நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உட்பட 5 பேரையும் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது. முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை காவல்துறையினர் விடுவிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். மேலும் காவல்துறை விசாரணை முடியும் வரை மேற்கொண்டு யாரிடமும் டெபாசிட் மேற்கொள்ளக் கூடாது என ஆருத்ரா நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரியையும் நியமித்துள்ளார்.