குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமிப்பிலிருந்த 200 கோடி மதிப்பிலான நிலம் அதிரடி மீட்பு!


குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகத்தினர் ஆக்கிரமித்திருந்த 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள பகுதியில், அந்த நிறுவனத்தால் பல ஆண்டுகளாக நீர்நிலை மற்றும் அனாதீனம் வகைப்பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் பொழுதுபோக்கு பூங்காவின் ஒரு பகுதியாக ரோப்கார் , நீச்சல் குளம், உணவகம் ஆகியவை செயல்பட்டு வந்தன.

குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமிப்பு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட நில நிர்வாக ஆணையத்திற்குப் புகார் வந்ததன் அடிப்படையில் அப்பகுதியில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சுமார் 32.41 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு சுமார் 200 கோடி என்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட நில நிர்வாக ஆணையர் உத்தரவின் பேரில் 200 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சுற்றுலாப் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படாததால், அவர்கள் ஏமாற்றத்துடனும், அதிர்ச்சியுடனும் திரும்பிச் சென்றனர்.

x