ஊராட்சி வார்டு உறுப்பினரை கொலை செய்து கிணற்றில் வீசி சென்ற உறவினர்கள்: சொத்துத் தகராறில் நடந்த பயங்கரம்!


கொலை செய்யப்பட்ட கனகராஜ்

சொத்துத் தகராறில் மேலூர் அருகே ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரை உறவினர்களே அடித்துக்கொலை செய்து கால்களில் கயிறை கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கேசம்பட்டியைச் சேர்ந்த சின்னழகு என்பவரின் மகன் கனகராஜ்(33). இவர் கேசம்பட்டி ஊராட்சியில் 6-வது வார்டின் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை கேசனம்குளத்தில் உள்ள தனது தோப்பிற்கு குளிக்கச் செல்வதாக அவரது மனைவி பார்வதியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் கனகராஜ் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், தோப்பில் உள்ள கிணற்றின் அருகே ரத்தக்கறையும், மரக்கட்டையும் இருப்பதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கிணற்றில் எட்டி பார்த்துள்ளனர். அதில், கனகராஜின் உடல் மிதந்துள்ளது. இதனையடுத்து, தகவலின் பேரில் நேரில் வந்த மேலவளவு காவல்துறையினர் தலையில் காயத்துடனும், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் கிடந்த கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த மேலவளவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் இன்று 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கனகராஜ் மற்றும் அவரது உறவினா்களுக்கு இடையே சொத்து தொடா்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று தோட்டத்திற்கு குளிக்கச் சென்ற கனகராஜை வழிமறித்த உறவினா்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, ஏற்பட்ட மோதலில் கனகராஜ் கட்டையால் தாக்கப்பட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடனே, அவரது கால்களை கயிற்றில் கட்டி சடலத்தை கிணற்றில் வீசிவிட்டுச் சென்றுவிட்டது தெரியவந்துள்ளது.

x