லஞ்ச வழக்கில் நேற்று மாலையில் கைது செய்யப்பட்ட திசையன்விளை நில அளவையர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகில் உள்ள மணலிவிளையைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி மகாலெட்சுமி(32). இவருக்குச் சொந்தமான இடத்தில் பட்டா மாற்றம் செய்ய அலைந்து வந்தார். இதுதொடர்பாக திசையன்விளையைச் சேர்ந்த நில அளவையர் அன்பழகன் என்பவரை அணுகினார். ஆனால் நில அளவையர் அன்பழகன் பட்டாவை மாற்றித் தருவதற்கு 6000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதைப்பற்றி மகாலெட்சுமி, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மதியழகனிடம் புகார்கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டைக் கொடுத்தனர். அதன்படி, மகாலெட்சுமி அந்தத் தாளைக் கொடுத்தார். அன்பழகன் அதை வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கையும், களவுமாகப் பிடித்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தானைச் சேர்ந்த அன்பழகன், திசையன்விளைக்கு சர்வேயராக பணிமாற்றம் பெற்று வந்தே மூன்றுமாதங்கள்தான் ஆகிறது. ஆனால், அதற்குள் அவர் பல இடங்களில் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றிருப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து அன்பழகன் தங்கியிருந்த மணலிவிளை வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். தொடர்ந்து அன்பழகனை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.