சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "மாணவர்கள்தான் இந்த நாட்டின் அறிவுச் சொத்துகள். என்னுடைய சொந்தப் பிள்ளைகளாக உங்களை வாழ்த்த வந்திருக்கிறேன். அரசு ஏற்படுத்தியுள்ள இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சமுதாயத்திற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உடல் சோர்வான நிலையில் இருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி புத்துணர்வு தருகிறது. மாணவச் செல்வங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் முதல்வராக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்டதுதான் இந்த திட்டம்" என்று அவர் பேசினார்.
இவ்விழாவில் ஹெச்சிஎல் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி, அரசுப் பள்ளிகளில் பயின்ற 2,500 மாணவ, மாணவிகளை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கவும், அந்தப் பயிற்சிக்கான முழு செலவையும் அரசே ஏற்பதுடன், அந்த மாணவா்கள் பட்ட மேற்படிப்பை பயில வாய்ப்பு வழங்கப்படும்.
சென்னையைத் தொடர்ந்து கல்லூரி கனவு நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னையில் உள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியா்கள் பங்கேற்றனர்.