பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தொடரும் லஞ்சப்புகார்: திருவாரூரில் அடுத்து அரங்கேறிய தற்கொலை!


கார்த்திகேயன்.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் கொடுத்து நிதி பெறும் நிலை தொடரும் புகாரின் அடுத்த நிகழ்வாக திருவாரூர் மாவட்டத்தில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகேயுள்ள பள்ளிவர்த்தி ஊராட்சி பெரிய குருவாடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(45). எலெக்ட்ரீசியன். இவர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளார். கடந்த 15-ம்தேதி கோட்டூர் ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர், பெரிய குருவாடி கிராமத்துக்குச் சென்று, இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ள பயனாளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இந்த திட்டத்தின் கீழ் தன்னை பயனாளியாக சேர்ப்பதற்காக, ஊராட்சி மன்றத் தலைவர் மாலாவின் கணவர் செந்தில்குமாருக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக மேற்பார்வையாளரிடம் கார்த்திகேயன் கூறியதாக தெரிகிறது.

இதையறிந்த செந்தில்குமார், அன்றிரவு கார்த்திகேயனின் வீட்டுக்குச் சென்று அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகேயன், கடந்த 19-ம் தேதியன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக விக்கிரபாண்டியம் போலீஸார் வாக்குமூலம் வாங்க மருத்துவமனைக்கு சென்றபோது, கார்த்திகேயன் மயக்க நிலையில் இருந்ததால், அவரது மனைவி ராதாவிடம் வாக்குமூலம் வாங்கிச் சென்றனர். இந்நிலையில் கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுதகுடியைச் சேர்ந்தவர் மணிகண்டன், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரசு அதிகாரி லஞ்சம் கேட்டு தொல்லை செய்ததாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தொடரும் லஞ்சப்புகாரும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் தற்கொலைகளும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x