இலங்கையின் எரிபொருள் நெருக்கடியைத் தீர்க்க இது தான் வழி: அமைச்சர் சொன்ன சூப்பர் ஐடியா!


இலங்கையின் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து பிரச்சினைகளுக்குத் தீர்வாக சைக்கிள் ஓட்டுதலைப் பிரபலப்படுத்த போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அனைத்துப் பொருட்களின் விலையும் கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்துள்ளது. எரிபொருள் கிடைக்காததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் விடிய, விடிய எரிபொருளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக சைக்கிள் ஓட்டுதலைப் பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி நகருக்கு வெளியே உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல மாணவர்களிடையே சைக்கிள் ஓட்டுவதை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரயிலில் கொழும்புக்குப் பயணிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு சைக்கிளில் செல்லவும், அங்கு பாதுகாப்பாக சைக்கிளை நிறுத்தவும் போக்குவரத்து அமைச்சகம் உத்தேசித்துள்ளது.

இதற்காக சைக்கிள் ஓட்டுபவர்களின் பாதுகாப்பிற்காக புதிய பாதைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை காவல்துறை, இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனம் மற்றும் சைக்கிள் ஓட்டுதலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்புக்குச் செல்லும் பிரதான ஏழு பிரதான வீதிகளிலும் பூங்கா மற்றும் சவாரி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

x