`கடந்த ஆட்சியில் அவர்களுக்கு வேண்டியதை மட்டும் செய்து கொண்டனர்'- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்


``கடந்த ஆட்சியில் வெள்ளத்தடுப்புக்காக எந்த பணிகளும் செய்யப்படவில்லை. அவர்களுக்கு வேண்டியதை மட்டும் செய்துகொண்டார்கள்'' என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் குற்றச்சாட்டி உள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "சென்னையில் தொடர்ந்து மழை பெய்தாலும் தமிழக அரசின் நடவடிக்கையின் மூலமாக எங்கும் நீர் தேங்காமலும், பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாமலும் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முன்பே அறிவித்து, எந்த கரையோரப் பகுதியிலும் சேதாரமில்லாமல் பார்த்துக்கொண்டோம். ஏறத்தாழ 300% அளவிற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை பெய்துள்ளது. அப்படி இருந்தும் எந்த பாதிப்பும் இல்லாத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும் கூட ஓய்வெடுக்காமல் உடனடியாக ஆய்வு கூட்டம் நடத்தி அதற்கு நடவடிக்கை எடுக்க சொன்ன சிறப்பான முதல்வர், தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்.

கடந்த ஆட்சியில் வெள்ளத்தடுப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "கடந்த ஆட்சியில் வெள்ளத்தடுப்புக்காக எந்த பணிகளும் செய்யப்படவில்லை. அவர்களுக்கு வேண்டியதை மட்டும் செய்துகொண்டார்கள்" என்று பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "சென்னையில் மழை பெய்தால் தண்ணீர் தேங்காத அளவிற்கு வாய்க்கால் வசதிகளை மாநகராட்சி செய்துள்ளது. வெளி மாவட்டங்களில் மழை பெய்யும் நேரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.

மேலும், தற்போது பெய்த மழையைப் பொறுத்த வரை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனவே, மத்திய அரசிடம் நிதி கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. எப்பொழுதும், நாம் கேட்பது ஒரு தொகையாக இருக்கும், மத்திய அரசு கொடுப்பது ஒரு தொகையாக இருக்கும். இது காலம் காலமாக நடப்பதுதான். மத்திய அரசு கொடுப்பது போக மீதத்தை தமிழக அரசு ஈட்டும்" என்றார்.

x