சீன எல்லையில் தீராத துயரம்: ஆடு மேய்க்கும் நாடோடிகளின் அவலம்!


மனிதர்கள் அனைவருமே தாங்கள் மட்டுமே பெருந்துயரில் அலைக்கழிக்கப்படுவதாக நினைப்பதுண்டு. அதே வேளையில் உலகின் பிற பகுதிகளில் மக்கள் படும் துயரங்களைப் படிக்கும்போதும் கேட்கும்போதும் மனம் உருகி, ‘அப்பப்பா இவர்களுக்கு இப்படியொரு துயரமா, நாமே பரவாயில்லை போலிருக்கிறதே!’ என்று அனுதாபத்துடன் ஆறுதல் அடைவது உண்டு. இந்திய – சீன எல்லையில், இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த கைகலப்புக்குப் பிறகு அப்பகுதியில் வசிக்கும் ஆடு மேய்க்கும் நாடோடிகளின் கதையைக் கேட்டால் இந்த எண்ணமே ஏற்படும்.

மேய்ப்பவர்கள் படும் துயரம்

விவசாயம், தொழில் என்று எதற்குமே வசதியில்லாத இமாலயத்தின் லடாக் பகுதியில் அவ்வளவு குளிருக்கும் இடையில் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்து வாழ்க்கை நடத்துகின்றனர் நாடோடிகள். மேய்ச்சல் நிலம் இருக்கும் இடத்தில்தான் கால்நடைகளை மேய்க்க முடியும் என்பதால் தாங்கள் இருக்கும் பகுதியில் புல் போன்ற பயிர் பச்சைகள் குறைந்துவிட்டால் பசுமையான வேற்றிடங்களைத் தேடி கால்நடைக் கூட்டங்களுடன் செல்வார்கள். அவற்றின் பாலைக் கறந்து விற்பார்கள். பாலிலிருந்து கிடைக்கும் பொருளைத் தயாரித்துத் தருவார்கள். ஆடுகளின் உரோமங்களைக் கத்தரித்து கம்பளி ஆடை நெய்வதற்குக் கொடுப்பார்கள். இதில் பெரிய அளவு வருமானம் வராது என்றாலும் புதிய இடங்களுக்குப் போய் புதிய தொழிலைச் செய்யும் மனம் இல்லாததாலும் காலம்காலமாக வாழ்ந்த இடத்தைவிட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதாலும் இங்கேயே வாழ்கின்றனர்.

இந்த நாடோடிகளில் பல பிரிவுகள் உண்டு. அவர்களில் ஒரு பிரிவினர் சாங்பா. டூம்சேலே, டேம்சோக், சுமுர், சாகா லா, கோயுல், லோமா என்ற கிராமங்களில் இவர்கள் வாழ்கின்றனர். இங்கிருக்கும் பள்ளத்தாக்கு சுஷுல் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. மேய்ச்சல் நிலம் சுருங்கி வருவதால் பட்டினியாலோ அல்லது போரிலோ இறந்துவிடுவோம் என்று இவர்கள் அஞ்சுகின்றனர். இவர்கள் இப்போது ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர்.

ஆடு மேய்க்கக் கூடாது என்று இரு நாட்டு ராணுவமும் கெடுபிடி செய்வதால் ஏராளமானோர் ஆடுகளை மந்தை மந்தையாக விற்றுவிட்டு கிடைத்த பணத்துடன் வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர். இந்தப் பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து 15,000 அடி உயரத்தில் இருக்கிறது. இங்குள்ள மலைச் சிகரங்கள் எப்போதும் பனியால் மூடப்பட்டிருக்கும். வெளியாட்களால் இங்கே ஒரு வாரம்கூட தங்க முடியாது. சாலைகள் என்பது பெயரளவுக்குத்தான். கடும் குளிர்காற்று வீசும் பகுதி இது. இங்கிருந்து போவதைத் தவிர வேறு வழியில்லை என்று பலர் கூறும்போது, இது எங்களுடைய மூதாதையர் வாழ்ந்த இடம், இந்த மண் எங்களுடையது, யார் சொன்னாலும் போகமாட்டோம் என்று சொல்பவர்களும் இங்கு இருக்கிறார்கள்.

கட்டுப்பாடு எல்லைக்கோடு

கட்டுப்பாட்டு எல்லைக் கோடு (எல்ஏசி) என்பதையே இரு நாடுகளும் இப்போதைக்கு எல்லையாக பாவிக்கின்றன. இந்தியாவும் சீனாவும் பிரிட்டிஷாரிடம் காலனியாக இருந்தபோது இந்தப் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் யாரும் அக்கறை காட்டியதில்லை. இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய மன்னர் காஷ்மீரையும் லடாக்கையும் கைப்பற்றி ஆண்டதற்கு வரலாற்று ஆதாரம் இருக்கிறது. அதற்கும் முன்னதாக இப்பகுதிகள் வழியாக சீனப் பயணிகளும் வியாபாரிகளும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும் சென்று வந்தனர். இந்தியர்களும் இந்தப் பகுதி வழியாக மங்கோலியா, மத்திய ஆசியா, சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளனர். இந்த வழியாகக் கடந்து சென்ற அனுபவ பாத்தியதை இரு நாடுகளுக்குமே இருக்கிறது, ஆண்டதற்கு வரலாற்று ஆதாரமும் இருக்கிறது. ஆனால் எழுத்துபூர்வமாக உடன்படிக்கை போன்ற உறுதியான ஆவணங்கள் இல்லை. இதுவே இரு நாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

அத்துடன் பிரிட்டிஷார் இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய எல்லைகளை அடையாளமிட்டு வரன்முறைப்படுத்திய காலம், இந்தியாவின் சுதந்திரத்துக்கு நெருங்கிக் கொண்டிருந்ததால் பிரிட்டிஷ் சர்வேயர்கள் அவசரமாகவும் அக்கறையில்லாமலும்கூட இந்த வேலைகளை அரைகுறையாகச் செய்து முடித்தார்கள்.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியத் தலைவர்களும் சீனத் தலைவர்களும் அமர்ந்து பேசி இதை சுமுகமாகவே தீர்மானித்திருக்கலாம். நமக்கு சீனா பக்கத்து நாடுதான் - எதிரி நாடு அல்ல என்றே பிரதமர் நேரு கருதி வந்தார். சீனாவோ நில எல்லையை விரிவுபடுத்துவதிலும் நிலைப்படுத்துவதிலும் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனாலேயே இரு நாட்டு எல்லைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைகளாலும் பலன் ஏற்படவில்லை.

ஒரு நாட்டின் நிலப் பகுதிக்கு விவசாய முக்கியத்துவம், தொழில் துறை முக்கியத்துவம், இயற்கை கனிமவள முக்கியத்துவம் ஆகியவை மட்டுமல்ல - ராணுவ ரீதியாகப் பாதுகாப்பு முக்கியத்துவமும் இருக்கிறது. உலகின் கூரை என்று சொல்லத்தக்க மலைப் பிரதேசத்தில் இன்னொரு நாட்டுக்கு இடம் தருவது என்பது பகையைத் தெரிந்தே உடன் வைத்துக்கொள்வதைப்போல. எனவே சீனாவுக்கு அதன் உரிமைக்குப் போக ஒரு அங்குல நிலத்தையும் விட்டுத்தரக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருக்கிறது. இந்தியா அணு ஆயுதம் தயாரித்து வைத்திருப்பதும் ராணுவ பலத்தைப் பெருக்க ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து நடத்துவதும் நாடுகளைப் பிடிக்கும் ஆசையில் இல்லை, நம்முடைய நாட்டை இழந்துவிடக்கூடாது என்பதற்காக.

மாவோவின் சிந்தனை!

திபெத்தை சீனாவின் வலதுகரமாகவும் லடாக், நேபாளம், சிக்கிம், பூட்டான், அருணாசல பிரதேசம் ஆகியவற்றை அதன் ஐந்து விரல்களாகவும் கருதியவர் செஞ்சீனத்தின் தந்தை மாசேதுங். மாவோவின் சிந்தனைகளைச் செயல்படுத்த நினைக்கும் நவ சீன அரசுகளின் ராணுவங்கள் அதனால்தான் தொடர்ந்து இந்தப் பிரதேசங்களில் நிலங்களுக்கும் முழுப் பகுதிக்கும் உரிமை கொண்டாடுகின்றன.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 2020 ஜூன் 15-ல் இந்திய நிலப்பரப்புக்குச் சொந்தம் கொண்டாடிய சீனாவின் மக்கள் விடுதலை சேனை (பிஎல்ஏ) படையினர் திடீரென இந்திய வீரர்கள் மீது பாய்ந்து கடுமையாகத் தாக்கினர். இரு நாடுகளும் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி அங்கே காவல் காக்கும் இரு நாட்டுப் படை வீரர்களும் துப்பாக்கி உள்ளிட்ட எந்த ஆயுதத்தையும் வைத்திருக்கக் கூடாது. தரையில் ஊன்றி நடப்பதற்கும் பயிற்சிக்கும் தடி வைத்துக்கொள்வதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட சீன ராணுவம் அந்தத் தடியில் கூர்மையான இரும்பு ஆணிகளையும் கண்ணாடிகள் - முட்கள் போன்ற மரத்துண்டுகளையும் செருகி அவற்றை வைத்து மூர்க்கமாகத் தாக்கியது. இதை எதிர்பாராத இந்திய வீரர்களில் பலர் பலத்த காயம் அடைந்தனர். இருபது பேர் இறந்தனர். இந்திய வீரர்களும் திருப்பித் தாக்கியதில் சீனர்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. கடுமையான செய்தித் தணிக்கை செய்யப்படும் நாடு என்பதால், அவர்கள் தரப்பில் உயிர்ச்சேதம் இல்லை என்றே முதலில் கூறப்பட்டது. பிறகு 4 பேர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த மோதலில் சீனத்தின் 38 வீரர்கள் இறந்தது அவர்களுடைய பெயர்ப் பட்டியல் ஒரு நினைவுத் தூணில் பொறிக்கப்பட்டதால் தெரியவந்தது.

அடுத்தடுத்து இரு பாலங்கள்

அதன் பிறகு சர்ச்சைக்குரிய பாங்காங் சோ ஏரிக்கு அருகில் முதலில் ஒரு பாலம் கட்டிய சீனா இப்போது மேலும் ஒரு பாலத்தை இன்னொரு பக்கத்தில் கட்டுகிறது. அது மட்டுமல்லாமல் சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் தங்கள் நாட்டு எல்லையில் ஏராளமான நிரந்தரக் கட்டுமானங்களைக் கட்டுகிறது. அவை ராணுவ நோக்கத்துக்கானவை என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிகிறது. ஏராளமான ராணுவ வீரர்களைத் தங்க வைக்கவும், அவர்களுக்குத் தகவல் தொடர்பு வசதிகளையும் உணவு, கேளிக்கை, மருத்துவ வசதிகளையும் அளிக்கவும் விரிவான முறையில் அந்தக் கட்டுமானங்கள் இருக்கின்றன. இந்திய எல்லையைத் தொடர்ந்து கண்காணிக்கவும் படம் பிடிக்கவும் அங்கிருந்தே தாக்கி அழிக்கவும்கூட எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இந்திய அரசும் இதற்குப் பதிலடியாக போதிய ஏற்பாடுகளை இந்திய எல்லைப் பகுதிக்குள் செய்து வருகிறது.

இதனால்தான் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் லடாக் கால்நடை மேய்ப்பவர்களைத் தங்கள் பகுதிக்கு அருகில் கால்நடைகளை மேய்க்கக் கூடாது என்று எச்சரித்து விரட்டுகின்றனர். நாடாடிகளான இந்த மக்கள் சீன ராணுவத்தின் நடமாட்டம் குறித்து இந்திய ராணுவ வீரர்களுக்குத் தொடர்ந்து தகவல் தெரிவித்து வருவதாகவும் அப்படியிருந்தும் இந்திய ராணுவ வீரர்கள் தங்களை விரட்டுவதாகவும் வருத்தப்பட்டனர். ஆனால், ‘தகவல் தருவோரை விரட்டும் நோக்கம் இந்திய ராணுவத்துக்கு இல்லை. தகவல்களைத் திரட்ட நம்பகமான ஆள்களை இந்தியா தயார் செய்திருக்கிறது. எந்த நேரம் வேண்டுமானாலும் மோதல் ஏற்படலாம் என்ற உயிருக்கு ஆபத்தான பகுதியில் மேய்க்க வேண்டாம் என்றுதான் அவர்களை விரட்டுகிறோம்’ என்கின்றனர் இந்திய அதிகாரிகள்.

சீனர்களோ, இவர்கள் இந்தியாவை ஆதரிப்பவர்கள், இந்திய ராணுவத்துக்குத் துப்பு கொடுப்பார்கள் என்பதற்காக விரட்டுகிறார்கள். இங்கே ஆளரவமே இல்லாவிட்டால் தாங்கள் செய்யும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏற்பாடுகளை இந்தியர்களால் கண்டுபிடிக்க முடியாது என்பதற்காகவும் விரட்டுகின்றனர். எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் ராணுவத்தினரையே குடி வைத்துவிட்டு, கிராமவாசிகளைப் போல பாசாங்கு செய்கின்றனர் சீனர்கள்.

சட்ட விரோதமாக அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஆக்கிரமித்த பகுதியில் முதலாவது பாலத்தை சீனா கட்டியிருப்பதை இந்திய வெளியுறவு அமைச்சகம் டெல்லியில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிப்படையாக அறிவித்தது. அந்த ஏரி, பூமராங் வடிவில் இருக்கிறது (பூமராங் என்பது விளையாட்டுக்கும் வேட்டைக்கும் பயன்படும் மரத்தாலான சாதனம். இதை நன்றாக சுழற்றி தொலைதூரத்துக்கு தூர எறிந்தால் அது இலக்கின் மீது பட்டு அதை வீழ்த்திவிட்டு மீண்டும் ஏவிய இடத்துக்கே வந்து விழும்).

இந்த ஏரியைச் சுற்றிலும் இருப்பது நிலப்பரப்புதான். ஏரியின் அதிகபட்ச அகலம் 6 கிலோமீட்டர். நீளம் 135 கிலோமீட்டர். ஏரியின் மூன்றில் ஒரு பகுதி இந்திய நிலப்பரப்பில் இருக்கிறது. எஞ்சியதை சீனம் ஆக்கிரமித்திருக்கிறது. இந்த ஏரியின் மேற்கு முனை லடாக்கின் லே நகருக்கு 54 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கும் கிழக்கில் 25 கிலோமீட்டர் தொலைவில் இரண்டாவது பாலத்தைச் சீனா கட்டுகிறது.

லடாக் கால்நடை மேய்ப்பவர்களின் சோக வாழ்க்கை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.

x