சபரிமலை செல்பவர்களுக்கு சந்தோஷமான செய்தி: இனி கரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை!


சபரிமலையில் பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய கரோனா தடுப்பூசி சான்றிதழ் இனி தேவையில்லை என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார்.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," கரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதியை கேரள அரசால் தொடங்கப்பட்டது. அதனை கேரள போலீஸார் நிர்வகித்து வந்தனர். இதையடுத்து தரிசன முன்பதிவு செயல்பாடுகள் முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஆணை பிறப்பிக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் தேவஸ்தானம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனு மீதான விசாரணையின் போது, தேவஸ்தானத்திற்கு ஆதரவான தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் வழங்கியது. அதைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செயல்பாடுகள் இனி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வராத பட்சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும்.

நிலக்கல் உள்பட முக்கிய இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு செய்ய கூடுதல் வசதிகள் செய்யப்படும். ஆதார் உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி உடனடி தரிசன அனுமதிக்கு முன்பதிவு செய்யலாம். இனி கரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை” என்று அவர் கூறினார்.

x