10 கோடி ரூபாய் திமிங்கல எச்சம் பதுக்கல்: மதுரையில் மூன்று பேரை தட்டித் தூக்கிய வனத்துறை


பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல எச்சம்

உயர் ரக வாசனை திரவியம் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் 'அம்பர்கிரிஸ்' எனப்படும் திமிங்கலம் எச்சத்தை கடையில் பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை மதுரை மாவட்ட வனத்துறையினர் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாநகர் தெற்குவாசல் அருகே மறவர்சாவடி பகுதியில் உள்ள கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சங்கள் பதுக்கிவைத்திருப்பதாக வன உயிர் பாதுகாப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கடையில் சோதனை செய்த போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோவிற்கும் அதிகமான திமிங்கல எச்சத்தினை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, இவற்றை பதுக்கிவைத்திருந்த மதுரை மஞ்சணக்காரதெருவைச் சேர்ந்த ராஜாராம்(36), வில்லாபுரம் ஹவுசிங்போர்டைச் சேர்ந்த சுந்தரபாண்டி(36), சிவகங்கை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த கவி(48) ஆகிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்பெர்ம் வகை திமிங்கலத்தின் வயிற்றில் இயற்கையாகவே சுரக்கும் 'அம்பர்கிரிஸ்; எனும் திரவம் திமிங்கலத்தின் வாய் வழியாக வெளியாகிறது. பின்பு அவை கடல் அலைகளில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்குகிறது. இந்த திரவமானது நாளடைவில் கடினமான பொருளாக மாறுகிறது. மேலும், இவை வாசனை திரவியம் மற்றும் பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. தனித்துவம் மிக்கதாக இருக்கும் இந்த 'அம்பர்கிரிஸ்' எனும் திமிங்கல எச்சம் கிலோ ஒன்று பல கோடி மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பதுக்கிவைத்திருந்த அம்பர்கிரிஸின் மதிப்பு சுமார் ரூ. 10 கோடி இருக்கும் என்கின்றனர் வனத்துறையினர்.

x