போலியாக ஆதார்கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்வை வைத்திருந்த வங்கதேச இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவருக்குப் போலி ஆவணங்கள் ஏற்பாடு செய்து கொடுத்த டிராவல்ஸ் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, ஓஎம்ஆர் பகுதியில் உள்ள நாவலூரில் கடந்த 21-ம் தேதி இரவு காவலர்கள் சிலர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான இருவரை மடக்கி விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் ஒருவர் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ரஜ்மான் உசேன் என்பதும், அவருடன் வந்தவர் படூரைச் சேர்ந்த கிரிதரன் என்பதும் தெரியவந்தது. இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவலை அளித்ததால் அவர்களை தாழம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையைத் தொடர்ந்தனர்.
அவர்களிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில் வங்கதேசத்தைச் சேர்ந்த ரஜ்மான் உசேனிடம் இரண்டு பாஸ்போர்ட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவருக்கு இரண்டு பாஸ்போர்ட் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர்கள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது வங்கதேசத்திலிருந்து கொல்கத்தா வந்து அங்கிருந்து ஒன்பது மாதங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள கேளம்பாக்கத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
கேளம்பாகத்தில் உள்ள ஒரு பாஸ்ட்புட் கடையில் வேலைபார்த்து வந்த ரஜ்மான் உசேன், துபாய் செல்ல திட்டமிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள நண்பர் ராஜூபாய் என்பவரைத் தொடர்பு கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து கேளம்பாக்கம் அடுத்துள்ள படூர் பகுதியில் உள்ள கிரிதரன் இன்பரைத் தொடர்புகொள்ளுமாறு அவரின் செல்போன் எண்ணைக் கொடுத்துள்ளார்.
படூரில் இ-சேவை மையம் நடத்திவரும் கிரிதரன் ஆன்லைன் டிக்கெட், அடையாள அட்டை, டிராவல்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்துவருகிறார். அவரை சந்தித்த ரஜ்மான் உசேன் 4500 ரூபாய் கொடுத்து போலியான அடையாளச் சான்றுகளை வைத்து ஆதார் கார்டு கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து பான் கார்டு, இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றையும் கிரிதரன் பெற்று கொடுத்துள்ளார். இந்த சான்றுகளை வைத்து அவருக்கு பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்துள்ளார். அதற்குப் பத்தாயிரம் ரூபாய் ரஜ்மான் உசேன் கொடுத்துள்ளார். நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், ரஜ்மான் உசேனின் அடையாளச் சான்றுகளைச் சரிபார்த்த பின்னரே அவருக்கு பாஸ்போஸ்ட் வழங்கி இருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து கிரிதரனின் அலுவலகத்தில் தாழம்பேடு போலீஸார் சோதனை நடத்தினர். அந்த அலுவலகத்தில் 25-க்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் ஏடிஎம் கார்டுகள், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் போலி அடையாள அட்டைகள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றைப் பலருக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதுபோல் ரஜ்மான் உசேனிடமிருந்தும் இரண்டு பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டுள்ளது.