லக்னோ: ஹாத்ரஸில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை மூடி மறைக்க வழிபாட்டு கூட்ட நிர்வாகிகள் முயன்றனர் என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
உ.பி. மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் இடா பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத வழிபாடு, ஆன்மிக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி121-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று சந்தித்துஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத வழிபாடு, பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதி வழங்கப்படும்.
உண்மை வெளிவரும்: இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் உண்மை வெளிவரும்.
மீட்பு மற்றும் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதே எங்கள் முன்னுரிமை. உயிரிழந்தவர்கள்உ.பி, ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்தவர்கள். காயமடைந்த 31 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவருக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பலருடன் நான் உரையாடினேன். நிகழ்ச்சி முடிந்ததும், சத்சங்கம் நடத்திய போலே பாபா சாமியார் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று பொதுமக்களில் பலர் அவரது பாதங்களைத் தொட்டு வணங்குவதற்காகவும் அவரை நோக்கிச் செல்லத் தொடங்கினர். சேவகர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால்தான், இந்த துக்ககரமான சம்பவம் நடந்தது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பிரச்சாரக் கூட்டங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்ஓபி) உருவாக்கப்படும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹாத்ரஸில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை மூடி மறைக்க வழிபாட்டு கூட்ட நிர்வாகிகள் முயன்றனர். சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.