உலகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட சுமார் 8 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
இந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் 15 நாடுகளில் ஏற்பட்டுள்ள கடுமையான உணவு மற்றும் மருத்துவ உதவி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, ஹைதி மற்றும் ஏமன் ஆகியவை முக்கிய இடத்தில் உள்ளன.
ஊட்டச்சத்து குறைபாடு என்பது குழந்தைகளுக்கு பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பினை ஏற்படுத்துகிறது, இது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு அபாயத்தை அதிகரிக்கிறது என யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.
2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கூடுதலாக 2,60,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா குழந்தைகள் முகமையின் அறிக்கை கூறியது. உக்ரைன் போர், உலகின் சில பகுதிகளில் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து ஏற்பட்ட வறட்சி காரணமாக உணவுபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. மேலும், கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட பொருளாதார தாக்கமும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது எனவும் ஐ.நா குழந்தைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில், "இந்த குழந்தைகளை காப்பாற்ற 1.2 பில்லியன் டாலர் உதவித் தொகுப்பு அவசரமாகத் தேவை. ஜி7 கூட்டத்துக்காக ஜெர்மனியில் கூடியிருக்கும் உலகத் தலைவர்களுக்கு இந்தக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. இனியும் வீணடிக்க நேரம் இல்லை, பஞ்சம் அறிவிக்கப்படும் வரை காத்திருப்பது குழந்தைகள் இறக்கும் வரை காத்திருப்பதற்கு சமம் " என்று யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் கூறினார்.