கர்நாடகாவின் ஹாசன் மற்றும் மாண்டியா மாவட்டங்களில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் வீடுகளை விட்டு பீதியுடன் வெளியே ஓடி வந்தனர், இதனால் அப்பகுதிகளில் பதற்றம் நிலவியது.
3.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஹாசன் மாவட்டத்தின் ஹோலேநரசிபூர் தாலுகாவின் நகரனஹள்ளி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட மலுகனஹள்ளி கிராமத்தின் 0.8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், "அதிகாலை 4.37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வு வரைபடத்தின்படி இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் மிதமானது. நிலநடுக்க மையத்திலிருந்து அதிகபட்சமாக 40-50 கிமீ தூரம் வரை இந்த நில அதிர்வு உணரப்படலாம். இந்த வகையான நிலநடுக்கம் மக்களுக்கு எந்த பதிப்பினையும் ஏற்படுத்தாது. இப்பகுதி நிலநடுக்க மண்டலம் II இல் உள்ளதால் தீவிர பூகம்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு, எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோலேநரசிபூர் தாலுகாவில் உள்ள 17 கிராமங்களில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளுக்கு வெளியே சுமார் 3 மணி நேரம் காத்திருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களிலும் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.30 மணி முதல் 4.45 மணி வரை பலத்த சத்தம் கேட்டதாகவும், இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.