உத்தர பிரதேசம், பஞ்சாப், டெல்லி, ஜார்க்கண்ட், ஆந்திர பிரதேசம், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களின் 3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.
2019 மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ஆசம்கர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி ஆன சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 2022 பிப்ரவரியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர், மாநில அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் சட்டப்பேரவை உறுப்பினராகவே தொடர முடிவெடுத்த அவர், மக்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். மார்ச் 22-ல் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து காலியான ஆசம்கர் மக்களவைத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.
அதேபோல, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஆசம் கான், உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ராம்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஆசம் கான் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். எனவே, ராம்பூர் மக்களவைத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சங்ரூர் தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தவர். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தனது எம்.பி பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து சங்ரூர் மக்களவைத் தொகுதி காலியானதால், அந்தத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.
டெல்லியின் ராஜீந்தர் நகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராகவ் சட்டா, மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.
அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தின் மண்டர், ஆந்திர மாநிலத்தின் ஆத்மகூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும், திரிபுரா மாநிலத்தின் அகர்தலா, டவுன் போர்டோவாலி, சுர்மா, ஜுபரஜ்நகர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்தத் தேர்தல்களின் முடிவுகள் ஜூன் 26-ல் அறிவிக்கப்படவிருக்கின்றன.
ஜூலை மாதம் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்த இடைத்தேர்தல்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.