1000 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உலக நாடுகளின் உதவியைக் கோரும் தலிபான்கள்


நேற்று அதிகாலை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000த்தை தாண்டியுள்ளது. எனவே சர்வதேச நாடுகள் உதவவேண்டும் என தலிபான்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகி, இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொலைதூர மலைப்பிரதேச கிராமங்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியாததால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாகவும், கனமழை, நிலச்சரிவு மற்றும் பல கிராமங்கள் அணுக முடியாத மலைப்பகுதிகளில் உள்ளதால் மீட்பு நடவடிக்கைகள் சிக்கலாகிவிட்டன எனவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. பொதுவாகவே ஆப்கானிஸ்தான் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன, எனவே தூரத்தில் உள்ள பகுதிகளில் மீட்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள எளிதில் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதனன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் 2002-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் பாகிஸ்தானின் எல்லைக்கு அருகில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தானில் சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை கிழக்கு மாகாணமான பாக்டிகாவில் ஏற்பட்டன, அங்கு 255 பேர் உயிரிழந்தனர், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் பல பிராந்தியங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலைகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன, எனவே மீட்புப்பணிகள் தாமதமாகின்றன.

இந்த சூழலில் ஐ.நா மனிதாபிமான அலுவலகம், ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவ சுகாதார குழுக்களை நியமித்து, மருத்துவ பொருட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. மேலும், உலக நாடுகள் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ வேண்டும் என தலிபான் அரசு கோரிக்கை வைத்துள்ளது.

x