15,000 சம்பளத்தில் கால் சென்டர் வேலை... 3,000 கொடுத்து ஏமாந்த பெண்கள்: போராட்டத்தால் கைதான விளம்பர ஊழியர்கள்


பாதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த 5 பேரை மயிலாடுதுறை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் இயங்கிவரும் பெஸ்ட் ப்யூச்சர் ஆஃப் இந்தியா என்ற அலுவலகம் 15,000 ரூபாய் வரையிலான சம்பளத்தில் கால் சென்டர் மற்றும் சூப்பர்வைசர் வேலை வாங்கித் தருவதாக சில நாட்களுக்கு முன் விளம்பரம் செய்திருந்தது. இந்த விளம்பரத்தை நம்பி மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர். மேலும், வேலை வாங்கி தருவதற்காக அவர்கள் கேட்ட 3000 ரூபாய் அட்வான்ஸ் தொகையும் செலுத்தியுள்ளனர்.

இரண்டு மாதங்கள் ஆகியும் அவர்களுக்கான எந்த வேலையையும் வாங்கி தரவில்லை என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சென்று கேட்ட போது, ``நீங்கள் சேர்ந்தது போல புதிய ஆட்களை சேர்த்து விடுங்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தில் உங்களுக்கு பங்கு தருகிறோம். இதுதான் உங்கள் வேலை. அதில் கிடைக்கும் பங்கு தொகைதான் உங்கள் ஊதியம்'' என்று சொல்லியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அறிந்தவர்கள், எங்களுக்கு வேலை வேண்டாம். கட்டிய பணத்தை திருப்பி தாருங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அந்த நிறுவனத்தை நடத்தி வரும் பிரபாகரன், சிங்காரவேலன், பூவரசி ஆகியோர் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

அவர்களின் புகார் மீது இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் மயிலாடுதுறை காவல்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் முன்பு இன்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாகிகள் 5 பேரை கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனை அடுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் அவர்கள் மீது புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது போராட்டம் செய்ததால் கைது செய்திருக்கும் போலீஸார், அத்தோடு விட்டு விடாமல் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் மீண்டும் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்து சென்றனர்.

x